“நடிகர் தனுஷ் மும்பையில் சொந்த வீடு வாங்க நான் விடமாட்டேன்..” என்று பிரபல பாலிவுட் இயக்குநரான ஆன்ந்த் எல்.ராய் சொல்லியிருக்கிறார்.
பாலிவுட் இயக்குநரான ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அந்தப் படம் தனுஷை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. இப்போது இதே இயக்குநரின் இயக்கத்தில் ‘அந்ங்கி ரே’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படம் பற்றி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் பேட்டியளிக்கும்போது நடிகர் தனுஷ் பற்றியும் உணர்ச்சிகரமாய் பேசினார்.
அந்தப் பேட்டியில், “ராஞ்சனா’ படத்தின் கதையை சொன்ன உடனேயே ‘நான் இதில் நடிக்கிறேன்’ என்று தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார் தனுஷ். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
சினிமாக்காரர்கள் பெரும்பாலும் சுயநலமாக இருப்பதாகக் கூறப்படுவது உண்டு. ஆனால் நான் அப்படி இல்லை. நடிகர் தனுஷ் எனக்கு தம்பி போன்றவர். அதனால்தான் அவரை நான் இதுவரையிலும் மும்பையில் வீடு வாங்க விடவில்லை. அவர் எப்போது மும்பைக்கு வந்தாலும் என்னுடைய வீட்டில்தான் தங்க வேண்டும் என்று சொல்லி என் வீட்டில்தான் அவரைத் தங்க வைக்கிறேன். இனிமேலும் அப்படித்தான்..” என்று நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.