Thursday, November 21, 2024

“எனக்கும் ஒரு சீஸன் திரும்ப வரும்..” – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் கோபம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.

ந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது.

ஆர்.வி.ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று காலையில் சென்னை, வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.  

இவ்விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கௌரவ் நாராயணன், பொன்.குமரன், கல்யாண், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் முக்கிய வேடத்தில் இடம் பெற்றிருக்கும் ரோபோ மேடையில் தோன்றி பெற்றுக் கொண்டது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்த விழாவுக்கு வரும்படி பல பெரிய, உச்ச நடிகர்களிடம் நானே கேட்டேன். எல்லாருமே ஏதேதோ சாக்குப் போக்கு சொன்னார்கள். கடைசியில் ‘பிஸி’ என்று சொல்லிவிட்டார்கள்.

சரி.. எல்லாமே ஒரு சீஸன்தான் என்பது எனக்குப் புரிந்தது. நமக்கும் ஒரு சீஸன் திரும்ப வரும். அப்போ பார்த்துக்கலாம் என்றுவிட்டுவிட்டேன்.

இயக்குநராக, நடிகராக இருந்த என்னை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்தான் ‘தெனாலி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் உதவி புரிந்தார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தயாரிப்பாக இந்தக் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தயாரித்திருக்கிறேன். என்னிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோருக்காக மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, இந்த ‘கூகுள் குட்டப்பா’வை உருவாக்கி இருக்கிறோம்.

படத்திற்காக தர்ஷன் மற்றும் லொஸ்லியா என புதுமுகங்களை இயக்குநர்கள் தேர்வு செய்ததும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது.

படத்தின் நாயகி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பணியாற்றும் பெண்ணாக ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டவுடன், இலங்கையில் பிறந்து தமிழை அழகாக பேசும் பிக்பாஸ்’ லொஸ்லியாவை படத்தின் நாயகியாக்கினோம்.  

என்னுடைய உதவியாளர்களாக இருந்தாலும், படப்பிடிப்பின்போது என்னை தயாரிப்பாளராக பார்க்காமல் நடிகராக வேலை வாங்கியது வியப்பை அளித்தது. அந்த ரோபோவை உருவாக்கி படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிட உதவிய தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பை நிறைவு செய்ததற்காக, இயக்குநர்களாக அறிமுகமாகும் சபரி கிரிசன் மற்றும் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் இயக்கிய ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகும் முன்னரே இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பில் அடுத்த படத்தை இவர்கள் இயக்கி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘கூகுள் குட்டப்பா‘ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், விக்ரமனின் வாரிசு கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தை தயாரிக்கிறேன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும். இந்தக் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News