“இயக்குநர் சிறுத்தை சிவாவும், ரஜினியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று ரஜினியின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’.
இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சிவா ஏற்கெனவே இயக்கியிருந்த ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்ற படக் கதைகளைப் போலவே இந்தப் படமும் கூட்டு குடும்பப் பின்னணியில்தான் உருவாகியுள்ளது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக் குழு.
முன்னதாக ‘அண்ணத்த’ படத்தில் இடம் பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. கடந்த வாரம் இந்தப் படத்தை ரஜினி தன் குடும்பத்தினருடன் சன் ஸ்டூடியோ தியேட்டரில் பார்த்தார்.
‘அண்ணாத்த’ படம் பார்த்த செளந்தர்யா ரஜினிகாந்த், இயக்குநர் சிவாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ”அண்ணாத்த’ படத்தில் நீங்கள் செய்துள்ளது மேஜிக். படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு உங்க கையை பிடிச்சு நன்றி சொன்னேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலைவருடைய வெறித்தனமான ரசிகை என்ற முறையிலும், அவரது மகள் என்ற முறையிலும் கூறுகிறேன். நீங்கள் அப்பாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.