Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’
எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்திற்கு ‘நதிகளில் நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு புது லைன் சொன்னார். ஆனால், “இது புது ஹீரோ பண்ணக் கூடிய கதை” என்றார். ஆனால் நான், “சிம்பு புது ஹீரோபோல் உழைப்பார்” என்று அந்தக் கதையை படமாக்க ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்னவுடன் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐசரி ஸார் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார்.
இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம். எனக்கே இந்தப் படம் ஒரு புது விசயமாக இருந்தது. ஜெயமோகன், “ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளியே வந்து ஜெயித்தால்தான் இயக்குநர். இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்” என்றார்.
ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். அவர் கதையைத் தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவதுபோல் ஒரு காதலை வைத்துள்ளேன்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்குமான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை கேட்டு, டியூன்களைப் போட்டுக் காட்டி விவாதிப்பார். அவருடன் வேலை செய்யும் அனுபவமே வித்தியாசமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் அந்தக் கதைக்கு 3 பாடல்களை தந்திருந்தார். பின்னர் இந்தக் கதையை சொன்னபோது புதிய பாடல்களை தந்தார். இவர்களால்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது…” என்றார்.