இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடந்தபோதே படத்தின் நாயகனாந தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “திரையரங்க உரிமையாளர்கள், விநயோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று பதிவிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இப்போது, அவரது எதிர்ப்பையும் மீறித்தான் ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
இதனால் தனுசுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நடிகர் தனுசும், நானும் கடந்த 10 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் பிரச்சினையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான்.
இந்தப் படத்தைத் தியேட்டரில் வந்தால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது உண்மைதான். ஆனால், வணிக ரீதியாக அதிக பொருட் செலவில் எடுத்த படத்தை ஒரு வருடமாக கையில் வைத்து இருப்பதால் எனக்குப் பெரும் வட்டி சுமை ஏற்பட்டு உள்ளது.
இந்தப் படத்தை இதற்கு மேலும் வெளியிடாமல் வைத்திருந்தால் எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் வேறு வழியில்லாமல் ஓ.டி.டி.யில் வெளியிடுகிறேன். தனுஷ் ஒரு தயாரிப்பாளராக என் நிலைமையைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சசிகாந்த்.