தமிழ்த் திரையுலகத்தில் அதிக எண்ணிக்கையில் வெள்ளி விழா படங்களை தந்தவரும், தமிழகமெங்கும் மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகருமான மோகன், திரைத் துறையில் 45 வருடங்களை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் நேற்று அவரது பிறந்த நாளில் மிகப் பெரிய விழாவாக கொண்டாடினர்.
இவ்விழாவில் நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்திலிருந்து முதல் சிங்கிளாக ஒரு அருமையான பாடல் வெளியிடப்பட்டது. ‘ஹரா’ படக் குழுவினருடன் திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகமெங்குமிருந்து பிரமாண்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் விஜய் ஶ்ரீஜி பேசும்போது, “மோகன் சார் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். அவரிடம் கதை சொல்ல எனக்கு 2 வருடங்கள் ஆனது. நிறைய கதைகள் கேட்டாலும் நல்ல படம் என்றால்தான் அவர் ஒப்புக் கொள்கிறார். இன்றும் ஷூட்டிங் செல்லும் இடங்களில் அவருக்காக ரசிகர்கள் குவிகிறார்கள். இந்தப் படத்தை அவர் ரொம்பவும் பிடித்து நடித்திருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த வெற்றிப் படமாக இது இருக்கும். அவர் வெற்றி விழா நாயகன் என்பதை இப்படம் மூலம் மீண்டும் நிரூபிப்பார்…” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “நான் இங்கு ஒரு இயக்குநராக அல்ல; ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன். பாலுமகேந்திராவின் மூத்த பிள்ளை அவர். கடைசிப் பிள்ளை நான் என்பது பெருமை எனக்கு. இளம் வயதில் அவரது படங்கள் பார்த்து ரசித்து வளர்ந்தேன். இயக்குநரான பின்பும் என் நடிகர்களுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் அவர் நடித்த காட்சிகளைத்தான் போட்டுக் காட்டுவேன். அவரது ‘ஹரா’ படம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. விரைவில் அவரோடு இணைந்து படம் செய்யவுள்ளேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.
நடிகர் மோகன் பேசும்போது, “நான் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் என்னுடன் இருப்பவர்கள் என் ரசிகர்கள்தான். அவர்களுக்கு என் மிகப் பெரிய நன்றி. இந்த விழாவைக்கூட நான் வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் என் ரசிகர்கள் வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன்.
இயக்குநர் பாலு மகேந்திராவின் மூத்த பிள்ளை நான். கடைசிப் பிள்ளையான இயக்குநர் சீனு ராமசாமி இங்கு வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பாலுமகேந்திரா ஒரு மகா கலைஞர். அவருக்கு சினிமாவில் எல்லாமே தெரியும். அவரது முதல் படமான ‘கோகிலா’வில் அண்ணன் கமலுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கமல் சார், ஷோபா மேடம், ரோஜா ரமணி என்று பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருந்தேன். மோகனின் ஃபேவரைட் படங்களில் கண்டிப்பாக ‘கோகிலா’ இடம் பிடித்திருக்கும்.
‘ஹரா’ படத்தில் என்னை மிக வித்தியாசமாக மாற்றி படமெடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ. இவருடன் இணைந்தது மகிழ்ச்சி. அப்பா, மகளுக்குள் உள்ள உறவை சொல்லும் கதை இது. குஷ்பு உடன் டூயட்டும் இருக்கு. உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
தமிழ் 86, தெலுங்கில் 9, கனடாவில் 6 மற்றும் மலையாளத்தில் 5 என இதுவரை 106 திரைப்படங்களில் நடித்துள்ள மோகன், ‘ஹாரா’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.