தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’.
சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “என் மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளேன். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி.
எனக்கு எந்தவிதமான கஷ்டமும் கொடுக்காமல் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. ரமேஷ் திலக் மனைவிதான் அவர் உடன் நடிக்கிறார் என்பது தெரியாமல் முதலில் அவரை சந்தேகப்பட்டேன். கலை இயக்குநரின் பணி எல்லாராலும் பாராட்டப்பட்டது. சுரேஷின் கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் உயிர். தமிழரசு இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். அவருக்கும் நன்றி. எடிட்டரின் உழைப்புக்கு நன்றி. நடிகை யாமினிக்கு நன்றி. நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்த பிறகுதான் படத்தில் ஆரிதான் ஹீரோ என்று தெரிந்தது. தன்யா அவர்களுக்கு நன்றி. படத்தின் இயக்குநர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம்…” என்றார்.