1980-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று தேசிய விருது பெற்ற நடிகையான ஷோபா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் ‘சாமந்திப் பூ’ என்ற படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்பு அவர் நடித்தக் காட்சிகளை நீக்காமல் அப்படியே அந்தப் படத்தில் பயன்படுத்தி ‘சாமந்திப் பூ’ படத்தை வெளிக்கொணர்ந்தது எப்படி என்பது பற்றி ‘டூரிங் டாக்கீஸின்’ ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் அந்தப் படத்தின் படத் தொகுப்பாளரான மோகன் கூறியுள்ளார்.

எடிட்டர் மோகன் இது பற்றிப் பேசும்போது, “ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் படத் தொகுப்பாளரின் பணி மகத்தானது. நான் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பணியாற்றியபோது ஒரு பாடலை 400 அடியில் ஷூட் செய்து வருவதாச் சொல்லி சென்றார்கள். ஆனால் வந்தவர்கள் கொடுத்ததோ மிகவும் குறைந்த அடியுள்ள பிலிம்கள். ‘இதை வைத்து நான் என்னய்யா செய்ய முடியும்…?’ என்றேன். ‘அதான் நீங்க இருக்கீங்களே ஸார்.. எப்படியாவது காப்பாத்துங்க ஸார்’ என்றார்கள். வேறு வழியில்லாமல் அதை அந்தக் குறைந்த அளவு பிலிமிலேயே ஸ்டாப் பிளாக் வைத்து முதன்முதலில் அந்த டெக்னிக்கை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
இதேபோல் ‘சாமந்திப் பூ’ படம் தயாராகி வரும்போதே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டார். அதனால் அவர் இதுவரையில் நடித்ததை வைத்து என்ன செய்வது என்பது தெரியாமல், அந்தத் தயாரிப்பாளர்கள் முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடத்தில் ‘எல்லாத்தையும் சரி பண்ணிரலாம்’ என்று நான் தைரியம் சொன்னேன். ஷோபா அந்தப் படத்தில் நடித்து ஓகே ஆகாத காட்சிகளின் நெகட்டிவ்கள் அத்தனையையும் பாஸிட்டிவ் போட வைத்தேன். அதிலிருந்து சில நல்ல ஷாட்டுகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொண்டேன்.
பின்பு, ஷோபா மாதிரியே இருந்த ஒரு பெண்ணை லாங் ஷாட்டில் நடக்க வைத்து.. ஓட வைத்து.. பேச வைத்து.. அதைப் படமாக்கி.. அதையும் ஒரிஜினல் ஷோபாவின் குளோஸப் ஷாட்டுகளையும் ஒட்ட வைத்து முழுப் படமாக்கினேன். இன்றுவரையிலும் இது யாருக்கும் தெரியாது. யாரும் கண்டுபிடிக்கவும் இல்லை…” என்றார் பெருமிதமாக..!