நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணனின் பிறந்தநாளை ஒட்டி இன்று நியூஸ் 7 தொலைக் காட்சியில சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பானது.
இதில் சித்ரா லட்சுமணனுடன் மூத்த பத்திரிகையாளர் ‘மக்கள் குரல்’ ராம்ஜி, புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மக்கள் குரல் ராம்ஜி, “சித்ரா லட்சமணன் நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். இந்த நிகழ்ச்சிக்குக் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார். அதே போல 75 வயதிலும் உடல் நலத்தைப் பேணுகிறார். நடிப்பு, ஊடகம் என பல பணிகளில் சிறப்பாக பணி புரிகிறார்.
திரைப்படத்தில் யாருக்கு எந்தவித கதாபாத்திரம் அளிக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவான பார்வை உடையவர் சித்ரா லட்சுமணன்.
பாரதிராஜாவின் சிஷ்யரான இவர், ‘முதல் மரியாதை’ படத்தில் செய்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. ஆனால், வில்லன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக எந்த நடிகர் இருப்பார் என்கிற விவாதம் படக்குழுவினரிடையே தொடர்ந்தது.
அதில் வில்லன் கதாபாத்திரத்துக்கு, சத்யராஜ்தான் பொறுத்தமாக இருப்பார் என சித்ரா லட்சுமணன் கருதினார். ஆனால் அந்த காலகட்டத்தில் சத்யராஜ் பரபரப்பாக பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவரது கால்ஷீட் கிடைப்பதே சிரமம்.

ஆனால் அந்த சூழ்நிலையிலும், சத்யராஜை அணுகி, ஒரே ஒரு நாள் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டார். நட்பு காரணமாக சத்யராஜூம் ஒப்புக்கொண்டார். திரைத்துறையில் விடுமுறை நாளாகக் கருதப்படும் இரண்டாவது ஞாயிறு அன்று, வெளியூர் படப்பிடில் இருந்து முதல் மரியாதை படத்தில் நடிக்க சத்யராஜ் வந்தார். பன்னிரண்டு மணி நேர கால்ஷீட்! காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை நடித்தார் சத்யராஜ். அந்த கதாபாத்திரம் முத்திரை பதித்தது” என்றார், ‘மக்கள் குரல்’ ராம்ஜி.