வாழ்க்கையில் அம்மா எவ்வளவு முக்கியமானவர் என்பதை நான்கு கதாபாத்திரங்களின் வாழ்வியல் சம்பவங்களின் மூலம் யோகி பாபு ஒரு கதையாக விவரிக்கிறார். முதலாவதாக மும்பையில் தாதாவாக இருக்கும் நட்டி, அடிக்கடி விபச்சார விடுதிக்கு செல்கிறார். அங்கே அவர் பெண்களிடம் ஒரு வினோதமான செயலை செய்கிறார். அந்த செயல் என்ன?
அடுத்து திருத்தணி அருகே ஒரு கிராமத்தில் பாரதிராஜா மற்றும் வடிவுக்கரசி தங்கள் மகன்கள் தரும் பணத்திலேயே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
பெற்ற தாய், தந்தைக்கு மகன்கள் திரும்பி என்ன செய்தனர்? என்று மூன்றாவதாக நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில், சிறு வயதில் தகப்பனை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த ரியோ ராஜ்க்கு அம்மா ஆதிரை தான் முழு உலகம். மகனை நல்ல முறையில் படிக்க வைத்து கலெக்டராக வளர்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா?கடைசியாக சென்னையில் ஆட்டோ ஓட்டும் சாண்டிக்கு, சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் கிடையாது. இந்த நிலையில் துளசி, சாண்டிக்கு ஒரு அம்மா ஆகிறார். அதன் பின்னணி என்ன?
இந்த நான்கு கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இப்படத்தின் மீதிக்கதை.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்த திரைப்படம் உண்மையாகவே பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. “அம்மா” எப்படிப்பட்ட நிபந்தனையற்ற அன்பை தருகிறார் என்பதை நான்கு கதைகளின் மூலம் இயக்குனர் பிரிட்டா ஜே.பி. அழகாக சொல்லியுள்ளார்.ஒவ்வொரு கதைக்கும் ஒன்றோடொன்று தொடர்பில்லாத போதிலும், அம்மா என்ற செந்தமிழ் வார்த்தை நான்கிலும் மையப் புள்ளியாக உள்ளது.
இதில் நடித்துள்ள பாரதிராஜா – வடிவுக்கரசி, நட்டி, ஆதிரை – ரியோ ராஜ், சாண்டி – துளசி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு துணையாக சுரேஷ் மேனன், ஏகன், ரிஷிகாந்த், விக்னேஷ்காந்த், மைம் கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் சக்கரவர்த்தி, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக பங்களித்துள்ளனர்.
இவர்களோடு இந்த நான்கு கதைகளை ரசிகர்களுக்கு சொல்லும் டிடிஆர் கதாபாத்திரத்தில் யோகி பாபு தனது நடிப்பால் மெருகேற்றியுள்ளார். அவருடன் லவ்லின் சந்திரசேகரும் சிறப்பாக ஆடியுள்ளார்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகியோரின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது. தேவ் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரீதியாக அமைந்துள்ளன. மேலும், பின்னணி இசையிலும் ரசிக்க வைத்துள்ளார்.