Friday, November 22, 2024

நடிகர் பார்த்திபன் – நடிகை சீதா திருமணம் நடந்தது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1989 ஏப்ரல் 14-ம் தேதியன்று வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புதிய பாதை’. இந்தப் படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் இயக்கியிருந்தார். இது இவரது முதல் திரைப்படம்.

இந்தப் படத்தில் சீதா நாயகியாக நடித்திருந்தார். நடிக்க ஆரம்பித்தவுடனேயே பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் இடையே காதலும் பிறந்தது. இந்தக் காதல் இந்தப் படம் முடிவதற்குள்ளேயே மிகவும் பெரிதாக வளர்ந்துவிட்டது.

‘புதிய பாதை’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற பின்பு பார்த்திபன், சீதா காதல் விவகாரமும் வெளியில் வந்தது.

இதையறிந்த சீதாவின் குடும்பத்தார் இந்தக் காதலைக் கடுமையாக எதிர்த்தனர். அதிலும் சீதாவின் அப்பா மிகக் கடுமையாக எதிர்த்தார். சீதாவுக்கு வீட்டிலும், வெளியிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படியிருந்தும் சீதாவை பார்த்திபன் மாறு வேடத்தில் சென்று சந்திப்பார்.

ஒரு கட்டத்தில் சீதாவிடமிருந்து பார்த்திபனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், “என்னுடைய சம்மதம் இல்லாமல் என் வீட்டார் தினமும் 2, 3 படங்களுக்கு என்னை ஒப்பந்தம் செய்து நடிக்கச் சொல்கின்றனர். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் அடுத்து நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று எழுதியனுப்பியிருந்தார்.

இந்தக் கடிதத்தைக் கண்ட பார்த்திபன் உடனடியாக சீதாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துடியாய் துடித்தார். அந்தத் திருமணத்திற்கு அவரே தேதியும் குறித்துவிட்டார். அந்தத் தேதி 1989 டிசம்பர் 11.

அந்த மாதத்தில் இருந்த கடைசி முகூர்த்த நாள் அதுதான். அடுத்த சில நாட்களில் மார்கழி மாதம் பிறக்கவிருப்பதால், இந்த நாளில் திருமணத்தை நடத்திவிடுவோம் என்று தீர்மானித்துவிட்டார் பார்த்திபன்.

ஏனெனில், சீதாவின் அப்பா சீதாவை நிறைய திரைப்படங்களில் புக் செய்துவிட்டார். இன்னும் ஒரு மாத வாய்ப்புக் கிடைத்தால் மேலும் பல படங்களில் ஒப்பந்தம் செய்துவிடுவார். அதற்குள்ளாக சீதாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளானார் பார்த்திபன்.

இப்போது கடும் பாதுகாப்பில் இருக்கும் சீதாவை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று யோசித்தார்கள் பார்த்திபனும், அவரது நண்பர்களும்.

அப்போது சீதாவை தினமும் சந்தித்து வரும் ஒரு திரையுலக நண்பர் ஒருவர் சீதா அதற்கு முந்தைய நாள் இரவில் ஒரு பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்கச் செல்வதாக ஒரு தகவலைக் கூறினார். அப்போது சீதாவை அங்கேயிருந்து எப்படி அழைத்துச் செல்வது என்று பார்த்திபன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்தார். அது சொதப்பிவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து அந்தத் திட்டத்தை கை விட்டனர்.

இதற்கிடையில் மறுநாள் காலை சீதா ஒரு படத்தில் நடிப்பதற்காக ஏ.ஆர்.எஸ்.கார்டனுக்குச் செல்வதாகவும் பார்த்திபனுக்குத் தகவல் கிடைத்தது. ஏ.ஆர்.எஸ்.கார்டனுக்கு படப்பிடிப்பைப் பார்க்கச் செல்வதாகப் போய் அங்கேயிருந்து சீதாவை அழைத்துச் செல்லலாம் என்றும் யோசித்தார்கள் நண்பர்கள். ஆனால், அங்கேயும் சீதாவின் பாதுகாப்புக்காக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வந்தால் அது சிரமம் என்பதால் அதையும் கைவிட்டனர்.

கடைசியாக சீதா டிசம்பர் 11-ம் தேதியன்று விடியற்காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போதே வீட்டு வாசலில் இருந்தே அழைத்துச் சென்றால் அதுதான் சேப்டி. யாருக்கும் தெரியாமல் இருக்கும். விடியற்காலை நேரம் என்பதால் கூட்டமும் இருக்காது.

நாம் யூனிட் வண்டி என்பதைப் போல 4, 5 அம்பாசிடர் கார்களில் போய் சீதாவின் வீட்டு வாசலில் நிறுத்துவோம். அவர் வீட்டுக்கு வெளியில் வரும்போது யாராவது ஒருவர் அருகில் போய் அழைத்து வருவோம் என்று திட்டத்தை முடிவெடுத்தார்கள் பார்த்திபனும், நண்பர்கள்.

சொன்னதுபோலவே மறுநாள் டிசம்பர் 11-ம் தேதி விடியற்காலையில் 4.30 மணிக்கெல்லாம் சீதாவின் வீட்டருகே 3 அம்பாசிடர் கார்களில் பார்த்திபனின் நண்பர்கள் சீதாவுக்காகக் காத்திருந்தனர். அதே நேரம் சீதா நடிக்கவிருந்த படத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவர்களது யூனிட் காரும் காத்திருந்தது.

இன்னொரு பக்கம் அமைந்தகரை பகுதியில் இருந்த பார்த்திபனின் இன்னொரு நண்பரின் வீட்டில் திருமணம் நடத்துதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

பார்த்திபன் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் மணமகனாக சீதாவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இங்கே வீட்டை விட்டு சீதா வெளியில் வந்து ரோட்டுக்கு வந்தவுடன் பார்த்திபனின் நண்பர்கள் தாங்கள் வந்த காரில் இருந்து இறங்கி சீதாவுக்கு சிக்னல் கொடுக்க… சீதா அவர்கள் வந்த காரில் மிக வேகமாக வந்து ஏறிக் கொண்டார். கார் பறந்துவிட்டது.

மணமகன் கோலத்தில் காத்துக் கொண்டிருந்த பார்த்திபனை வந்தடைந்தார் சீதா. ஷூட்டிங்கிற்காக சுடிதார் அணிந்து வந்திருந்த சீதா, அங்கே வந்து சேர்ந்த பின்பு தயாராக இருந்த பட்டுப் புடவை அணிந்து கொள்ள.. அங்கேயே அவரது நண்பர்கள், சில பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பார்த்திபன்-சீதா திருமணம் நடந்தேறியது.

தன்னுடைய திருமணத்திற்குப் பின்பு இது பற்றி சீதா பேசும்போது, “என்னோட அம்மாவும், அப்பாவும் என் மீது ரொம்பவும் பாசமாத்தான் இருந்தார்கள். ஆனால் நான் சினிமாவில் நடிக்கத் துவங்கிய பின்பு என்னை வெறுமனே பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்த்தார்கள்.

என்னைக் கேட்காமலேயே என்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே பல படங்களில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். என்ன படம்.. யார் ஹீரோ.. எங்கே ஷூட்டிங்.. இது எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் நாளைக்கு இங்க ஷூட்டிங்.. இத்தனை மணிக்குக் கிளம்பணும் என்று மட்டும்தான் சொல்வார்கள்.

எனக்கு எவ்வளவு சம்பளம்.. அதை யார் வாங்குறாங்க.. இதுவரைக்கும் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கு.. என் பேர்ல சொத்து எதுவும் இருக்கான்னுகூட எனக்குத் தெரியாது.

பார்த்திபனுடன் நான் காதல் கொண்டிருக்கும் செய்தியறிந்து அதற்கு ஒத்துக் கொள்ளவே மறுத்தார்கள். என்னை என்னென்னவோ சொல்லி பயமுறுத்தினார்கள். இடையில் திடீரென்று ஒரு நாள் ஒரு அம்மா போன் செய்து.. நான் பார்த்திபனின் மனைவி பேசுறேன். நீ எப்படி என் புருஷனை லவ் பண்ணலாம்ன்னு பொய்யா பேச வைச்சாங்க.. இவ்வளவும் செஞ்சும் நான் பார்த்திபன் மீது கொண்ட காதல்ல உறுதியா இருந்தேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை சீதா.

இத்தனை காதலோடு துவங்கிய அவர்களது வாழ்க்கைப் பயணம் கடைசியில் விவாகரத்தில் முடிவுற்றது என்பதற்கு விதிதான் காரணம் என்று சொல்லலாம்..!

- Advertisement -

Read more

Local News