Friday, April 12, 2024

‘பிரண்ட்ஷிப்’ – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தில் ஆக்சன் கிங்’ அர்ஜுன், லாஸ்லியா, சதிஷ், J.S.K.சதீஷ்குமார், வெங்கட் சுபா, M.S.பாஸ்கர், பழ.கருப்பையா, வேல்முருகன்,  வெட்டுக்கிளி  பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா, தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா, இணை தயாரிப்பு – வேல்முருகன், ஒளிப்பதிவு – சாந்த குமார், இசை – D.M.உதயகுமார், படத் தொகுப்பு – தீபக் S.துவாரக்நாத், கலை இயக்கம் – மஹேந்திரன், வசனம் – P.S.ராஜ், ஒலி வடிவமைப்பு – ஆனந்த்(4 Frames), நடன இயக்கம் – ஷாம் சூர்யா, ஆடை வடிவமைப்பு – வசந்த், ஸ்டில்ஸ்- சிவா, நிர்வாக தயாரிப்பு – ரோபின், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

2018-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘QUEEN’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.

ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் படித்து வரும் ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் இன்னும் மூன்று பேர் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இந்த வகுப்பில் ஒரேயொரு மாணவியாக வந்து சேர்கிறார் லாஸ்லியா. இந்த நட்பு வட்டத்தில் மிக எளிதாக இணைந்து கொள்கிறார் லாஸ்லியா.

ஒரு கட்டத்தில் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர்கள் லாஸ்லியாவை கடத்திச் சென்று கொலை செய்துவிடுகிறார்கள். இந்தக் கொலைக்கு உரியவர்களைக் கைது செய்யக் கோரி பெரும் போராட்டம் நடத்துகிறார்கள் மாணவர்கள்.

இந்த மாணவர்கள் மீது கோபம் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள்தான் லாஸ்லியாவை கொலை செய்தார்கள் என்று கதையை மாற்றி வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வைக்கிறார்.

ஆனால் இந்த வழக்கில் இருந்து இவர்களைக் காப்பாற்ற வருகிறார் புகழ் பெற்ற வழக்கறிஞரான ‘சாணக்யா’ என்னும் அர்ஜூன்.

அர்ஜூன் இவர்களைக் காப்பாற்றினாரா.. உண்மையில் கொலை செய்தவர்கள் பிடிபட்டார்களா என்பதுதான் படத்தின் கதை.

2018-ம் ஆண்டு கேரளாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தின்போது வெளியான இந்தப் படம் அப்போதே பெரும் பரபரப்பானது. பெண்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தப் படம் சொல்லியிருக்கும் நீதி சரியானதுதான். ஆனால் சொன்ன விதம்தான் நம் மனதை ஈர்க்கவில்லை.

முதல் விஷயம் நடிகர், நடிகைகள் தேர்வு சரியில்லை. நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்பதுபோல முகத்தை வைத்துக் கொண்டு கடைசிவரையிலும் நம்மை சோதித்திருக்கிறார் ஹர்பஜன்சிங். இவரை ஏன் இந்தப் படத்தில் நடிக்க வைத்தார்கள் என்பதை இயக்குநர் சொன்னால் தேவலை.

இவருடன் நாயகியும் சேர்ந்துதான். லாஸ்லியாவை பார்த்தவுடன் காதலோ, ஈர்ப்போ வரவில்லை என்பதால் படத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம் ரசிகனையும் தொற்றவில்லை என்பது உண்மை. ஆனால், தன்னால் முடிந்த அளவுக்கு லாஸ்லியா நடித்திருக்கிறார். இவரைவிடவும் ஒரு காட்சியென்றாலும் அந்த மாற்றுத் திறனாளி பெண்ணாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வெங்கட் சுபா மிரட்டியிருக்கிறார். ஆணாதிக்கத்தனத்தோடு அவர் சொல்லும் உதாரணக் கதையைத்தான் இப்போது எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து மாணவர்களை மிரட்டுவதெல்லாம் டூ மச்சான திரைக்கதை இயக்குநரே..!

சதீஷ் இதுவரையிலும் நாயகர்களுக்கு உதவியாக இருந்தவர் இந்தப் படத்தில் ஐவரில் ஒருவராகவும் வந்திருக்கிறார். நடித்தாரா என்று தெரியவில்லை. இருக்கிறார். அவ்வளவுதான்.

படம் சின்ன பட்ஜெட் என்பது ஒளிப்பதிவை பார்த்தாலே தெரிகிறது. இசையும் சுமார். பாடல்களும் சுமார். திடீர், திடீரென்று வரும் பாடல் காட்சிகளும் நமது பொறுமையை சோதித்திருக்கின்றன.

ஒரேயொரு ஆறுதல் அர்ஜூன்தான். அவர் வந்த பின்பு.. கோர்ட் காட்சிகளில்தான் படம் களை கட்டுகிறது. அந்த நேரத்தில் பேசப்படும் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. நீதிபதியான பழ.கருப்பையா கோர்ட்டின் உண்மையான நிகழ்வினை படம் பிடித்துக் காட்டுவதுபோல பேசியிருக்கிறார்.

சாட்சி சொல்ல வரும் பெண்ணின் வீடியோவில் இருக்கும் டிவிஸ்ட் ஓகே.. இதேபோல் லாஸ்லியாவுக்கு இருக்கும் கேன்சர் நோயை சஸ்பென்ஸாக வைத்திருந்து கோர்ட்டில் உடைப்பது திருப்பம்தான்.

இருந்தும் ஒட்டு மொத்தமாக இயக்கம் அழுத்தமாக இல்லை என்பதால் இந்தப் படம் நம் மனதைத் தொடவில்லை என்பதுதான் உண்மை.

ஆனாலும், பெண்களுக்கெதிரான வன்முறையை யார் செய்தாலும் தவறு என்பதைச் சொல்லும் ஒரேயொரு காரணத்திற்காக படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.

- Advertisement -

Read more

Local News