Thursday, November 21, 2024

FIR – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலிலும், சமூகச் சூழலிலும் இஸ்லாமியர்கள் என்றாலே ஒருவித மனப்பான்மையுடன் அணுகும் முறை அனைத்து மட்டங்களிலும் நடந்தேறி வருகிறது.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற அர்த்தத்தில் அவர்களுக்கெதிரான அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் பேசி வருகிறார்கள். அப்படியொரு நெருக்கடியான சூழலை சந்திக்கும் ஒரு இஸ்லாமிய இளைஞனின் கதைதான் இந்தப் படம்.

‘இர்பான் அகமது’ என்ற விஷ்ணு விஷால், சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜீனியரிங் பிரிவில் கோல்டு மெடல் வாங்கியவர். தனது தகுதிக்கேற்ற வேலை தேடி அலைகிறார். இஸ்லாமியராக இருப்பதால் பல இடங்களில் வேலை கிடைக்காமல் போகிறது.

இதனால் தற்போதைக்கு ஆர்.என்.ஆர்.மனோகர் நடத்தும் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.

உலகம் தழுவிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ‘அபுபக்கர் அப்துல்லா’ என்ற தீவிரவாதி இந்தியாவிற்குள் கால் வைத்திருப்பதாகவும். இந்தியாவில் ஏதோ சதி வேலைகளைச் செய்ய அவன் திட்டமிடுவதாகவும் மத்திய அரசுக்குத் தகவல் கிடைக்கிறது.

இதற்கான தேசிய புலனாய்வு முகமையின் தலைவரான கவுதம் வாசுதேவ் மேனனின் உத்தரவினால் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஹைதராபாத்திற்கு வேலை விஷயமாக சென்று வரும் விஷ்ணு விஷாலின் செல்போன் விமான நிலையத்தில் காணாமல் போகிறது.

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்து விஷ்ணு விஷால் சென்னைக்கு வந்து கொண்டிருக்கும்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கிறது. இந்த வழக்கில் விஷ்ணு விஷால் கைது செய்யப்பட்டு கொடூரமாக விசாரிக்கப்படுகிறார்.

தனது தாயின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக “நான்தான் அந்த அபுபக்கர் அப்துல்லா…” என்று பொய் சொல்கிறார் விஷ்ணு விஷால். அடுத்து அவர்களிடமிருந்து தப்பிக்கவும் செய்கிறார்.

மத்திய உளவு அமைப்புகள், மாநில போலீஸ் என்று அனைவருமே விஷ்ணு விஷாலைத் தேட துவங்குகிறார்கள். இறுதியில் விஷ்ணு விஷால் தான் அப்பாவி என்பதை நிரூபித்தாரா..? தனது தாயை சந்தித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விஷ்ணு விஷாலின் நடிப்புக்கு ஒரு உதாரணமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய உடல் மொழியுடன் கூடிய பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

“மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவரா நீங்கள்..?” என்று நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு பதிலளிக்கும்போதும், என்.ஐ.ஏ. விசாரணையில் ரைசா வில்சனின் எடக்கு மடக்கு கேள்விகளைத் தாங்க முடியாமல் கோபப்படும்போதும் ‘இர்பான் அகமது’வே நமது கண்களுக்குத் தெரிகிறார்.

வெறுமனே தீவிரவாதம், இஸ்லாமியர்கள், குண்டு வெடிப்பு என்று மட்டுமே வைத்தால் மக்களை அது கவராது என்று நினைத்து இடையில் தாய் சென்டிமெண்ட்டையும் கொஞ்சம் தூவியிருக்கிறார்கள்.

அம்மா உயிருக்குப் போராடுவது தெரிந்தவுடன் உண்மையைச் சொல்லிவிடுவான் என்று அதிகாரிகள் நினைப்பதும், அதை வைத்தே தப்பிக்க விஷ்ணு விஷால் திட்டமிடுவதும் திரைக்கதையில் வலுக்கட்டாயமாக எழுதப்பட்ட கதையாகவே தெரிகிறது.

உலகம் தேடும் தீவிரவாதியை நீதிபதி முன் ஆஜர்படு்த்த அழைத்துப் போகும்போது இப்படித்தான் 4 பேர் பாதுகாவலுடன் அழைத்துச் செல்வார்களா என்ன.? இயக்குநர் தனது திரைக்கதைக்காக இந்த இடத்தில் சமரசம் செய்து கொண்டார் போலும்..!

சண்டை காட்சிகளிலும், தனது உடல் வலுவைக் காட்டி நடிக்கும் காட்சிகளிலும் தானும் ஒரு ஆக்சன் ஹீரோதான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

என்.ஐ.ஏ. தலைவரான கவுதம் வாசுதேவ் மேனன் அலட்டல் இல்லாமல் அதிகாரத் தோரணையுடன் பல ஆங்கில வார்த்தைகளுக்கு நடு, நடுவே சில சில தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்திருக்கிறார். வெறும் வசனங்களும் காட்சியமைப்புகளுமே அவரை ஒரு தந்திரக்காரராகவே காட்டுகிறது. இறுதியில் “இவர் அபுபக்கர் அப்துல்லாவைவிட மிகப் பெரிய பயங்கரவாதி…” என்பதை இயக்குநர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

ரைசா வில்சன் இஸ்லாமியராக இருந்தாலும் என்.ஐ.ஏ.வில் அதிகாரியாக இருந்து ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரெபா மோனிக்கா ஜான் இந்த அணியில் அதிகாரியாக வந்து துப்பாக்கிச் சூடெல்லாம் நடத்துகிறார்.

விஷ்ணு விஷாலால் காதலிக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மஞ்சிமா மோகன் அந்தக் கதைக்குள்ளேயே போகாமல் ஒரு வழக்கறிஞராக விஷ்ணு விஷாலுக்கு உதவும் நோக்கிலேயே திரைக்கதையில் இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

“என் மூஞ்சில ஆசிட் அடிச்சாலும் நாளைக்கும் இதே இடத்துல வந்து உக்காந்திருப்பேன்…” என்று கோர்ட் வாசலில் தெம்பாக சவால் விடும் காட்சியில் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கிறார் மஞ்சிமா.

விஷ்ணு விஷாலின் அம்மாவான மாலா பார்வதியும் தனது மென்மையான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும் பல கதாபாத்திரங்கள் திடீர், திடீரென்று வந்து நடித்துவிட்டுப் போகிறார்கள். அனைவரையும் மனதுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் நம் நினைவகம் தடுமாறுகிறது. ஆனால், ‘அபுபக்கர் அப்துல்லா’ யார் என்பது தெரியும்வரையிலும் அந்த சஸ்பென்ஸை கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவில் படம் ஒரு தரமான ஒளிப்பதிவில் ஜொலித்திருக்கிறது. பின்னணி இசையில் அஸ்வத் ஒரு பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். சில தேவையற்ற காட்சிகளை நீக்கியிருந்தால் படம் நீட்டான ஒரு திரில்லர் கதையைப் படித்தது போல இருந்திருக்கும்.

உண்மையில் இயக்குநர் மனு ஆனந்த், “முஸ்லீம்களுக்கு நல்லது செய்கிறேன்..” என்ற நினைப்பில் கெடுதல்தான் செய்திருக்கிறார். ஒரு புதிய தலைமுறையினர் “நாம் அனைவரும் இந்தியர்கள்தான்…” என்ற மனநிலையில் வளர்ந்து வரும்போது இப்போது திடீரென்று புதிதாக இஸ்லாமியர்கள் மீதான ஒரு எண்ணவோட்டத்தை மாற்றும்படியான இந்தக் கதையை தேர்வு செய்தது சரியில்லை.

அதுவும் இயக்குநரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒரு இந்துவாக இருந்து கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசியிருப்பது சரியானதல்ல. இந்து பயங்கரவாதத்தைப் பற்றித்தான் இவர்கள் முதலில் பேசியிருக்க வேண்டும். இதனால்தான் சில இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து இந்தப் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த எதிர்ப்புகளில் தவறில்லை என்று நாமும் சொல்கிறோம்.

மேலும் விஷ்ணு விஷாலே ஒரு இ்ந்திய புலனாய்வு அமைப்பின் ஊழியர் என்று கடைசியாக வைக்கும் டிவிஸ்ட்டே அவரது இந்தக் கடின உழைப்பை கேலிக் கூத்தாக்கிவிட்டது. “வேணும்ன்னே மாட்டிக்கிட்டு அடி வாங்குறானா..?” என்பதில் என்ன பரிதாபத்தையும், அடடா என்ற உணர்ச்சிக் குவியலையும் ரசிகர்கள் கொடுத்துவிட முடியும்..?

இந்திய புலனாய்வு அமைப்பே ஒரு இஸ்லாமிய இளைஞனை பலியாடாகப் பயன்படுத்தி அபுபக்கரை பிடிக்க முயல்வதெல்லாம் சர்வாதிகாரமே தவிர வேறில்லை. “அவர்களே குண்டு வைப்பார்களாம்.. அவர்களே எடுப்பார்களாம்..” என்ற பாணியில் திட்டமிட்டு ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்தி அதற்கு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி பிரச்சாரம் செய்வதெல்லாம் ஒரு நல்ல அரசு செய்யும் காரியம் இல்லை. இந்தத் திரைக்கதையிலேயே மத்திய அரசு, மத்திய புலனாய்வு அமைப்பு மீது நமக்கு கோபம்தான் வருகிறது. பிறகு எங்கேயிருந்து தேச பக்தி பிறக்கும்..?

தவறான கதையில், தவறான திரைக்கதையில் நடிகர், நடிகைகளின் நடிப்பும், இயக்குநரின் சிறப்பான இயக்கமும், தொழில் நுட்பக் கலைஞர்களின் தரமான பங்களிப்பும் இடம் பெற்றிருப்பது இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் பின்னடைவுதான்..!

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News