நடிகர் விஜய்யின் 47-வது பிறந்த நாளையொட்டி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் வைபவம் அமோகமாக நடந்து முடிந்தது.
திரையுலக நடிகர், நடிகைகள், பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி ஓய்ந்து போக.. இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் அவருடைய ரசிகர்கள் அவரை அரசியலுக்குள் இழுத்துவிடும் வேலையையும் செய்திருக்கிறார்கள்.
சில ஆர்வக் கோளாறு ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தியும், அவர்தான் அடுத்த முதல்வர் என்பது போலவும், அரசியல் களத்தில் விஜய் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் போஸ்டர்களை அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள்.
ஏற்கெனவே ‘தலைவா’ படத்தின் போஸ்டரில் ‘A Time To Lead’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்திற்காகவே அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய் அந்தப் படத்தை வெளியிடுவதற்குள் படாதபாடுபட்டுவிட்டார்.
ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும், அவரது அப்பாவும் பெரும் முயற்சி எடுத்தனர். கோத்தகிரியில் இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்கே விஜய் சென்றும் அவரை சந்திக்கவோ, உள்ளே விடவோ அனுமதி மறுத்துவிட்டார் ஜெயலலிதா.
இதில் பெரிதும் அவமானப்பட்டுப் போன விஜய்.. அதற்குப் பிறகு அரசியல் பற்றிய கருத்துரைகளை தனது படத்தில் குறைத்துக் கொண்டார். வசனங்களில் நேரடியாக ஆட்சியாளர்களைத் தாக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை தலையெடுக்க போஸ்டர்களும், செய்திகளும், எஸ்.ஏ.சி.யின் அறிவிப்புகளும் ஒன்றாக வந்தபோது வருமான வரித்துறை களத்தில் குதித்தது.
‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நெய்வேலிக்கே படையெடுத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்து வீட்டை சோதனையிட்டனர்.
மேலும், வீட்டில் இருந்த சில அறைகளுக்கு சீல் வைத்தவர்கள் 20 நாட்கள் கழித்து மீண்டும் வந்து சீல் வைத்த அறைகளைச் சோதனையிட்டு விஜய்யை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.
இதற்குப் பிறகு மீண்டும் நெய்வேலிக்கு படப்பிடிப்புக்கு வந்த விஜய் சத்தமில்லாமல் தனது ரசிகர்களை அங்கே வரவழைத்து அவர்களுடன் ஒரு செல்பி எடுத்து தனது ரசிகர் மன்றத்தினரை உற்சாகப்படுத்தினார்.
இந்தத் தொல்லைகளே வேண்டாம் என்றுதான் அவரது அப்பா எஸ்.ஏ.சி. துவங்குவதாகச் சொன்ன ‘தளபதி விஜய் மக்கள் மன்றம்’ என்ற கட்சிக்கு தனது ஆதரவினைத் தர மறுத்துவிட்டார் விஜய். அதோடு விஜய்க்கும் அவரது அப்பாவுக்குமான நல்ல நட்பும் முறிந்துபோய் இன்றுவரையிலும் அது ஒட்டாமலேயே இருக்கிறது.
இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்ட பின்பும் அடங்காத அவரது ரசிகர்கள், விஜய்யை முதலமைச்சர் ரேன்ச்சுக்கு உயர்த்தி போஸ்டர்களை அச்சடித்து வெளியிட்டுள்ளார்கள்.
மதுரை பகுதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வெளியிட்ட ஒரு போஸ்டரில் 2026-ல் விஜய்தான் தமிழகத்தின் முதல்வர் என்று பட்டவர்த்தனமாய் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் ஆட்சிக்கான செங்கோலை முதல்வர் ஸ்டாலினே விஜய்யிடம் கொடுப்பதுபோலவும் புகைப்படத்தை அச்சிட்டிருக்கிறார்கள்.
இதேபோல் “தமிழகத்தில் இனி எப்போதும் தேவையில்லை டாஸ்மாக்.. அரசியலில் நீங்கள் வந்தால் மக்கள் தருவார்கள் பாஸ்மார்க்” என்று மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து விஜய் சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வருவது போலவும் இன்னொரு போஸ்டரில் ஜில்லென்று இருக்கிறார் விஜய்.
மற்றொரு போஸ்டர் விஜய் தமிழகத்தையே தன் கையில் தூக்கி வைத்திருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் விஜய் ரசிகர்களின் அரசியல் ஆசை இன்னமும் அவர்களுக்குள் கனன்று கொண்டேயிருக்கிறது. இப்போதைய திமுக ஆட்சியில் பழி வாங்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்கிற தைரியத்தில்தான் விஜய் ரசிகர்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
அதே நேரம் தனது ரசிகர்களின் இந்த ஆசையையும், நடவடிக்கைகளையும் பார்த்து ஆளும் கட்சியினர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை விஜய்யும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
இனி விஜய்யின் அரசியல் ஆசை வளருமா..? அல்லது வளராதா..? என்பது அவரது ரசிகர்களிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ இல்லை. தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைகளில்தான் உள்ளது.