தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான அர்ஜுன் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். இந்தப் படத்தில் நாயகியாக தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டார் அர்ஜுன்.
இதற்காக தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான விஷ்வக் சென்னை படத்தின் நாயகனாகவும் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்றைக்கு செய்தியாளர்களை அவசரமாக அழைத்த அர்ஜுன் தான் இயக்கவிருந்த படத்தின் நாயகன் விஷ்வக் சென் குறித்து பலவித குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கினார்.
“என் மகளை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்தப் படத்தைத் தொடங்கினேன். நான் கதையைச் சொன்னதும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஷ்வக் சென். அவர் கேட்ட சம்பளத்தையும் நாங்களும் தர தயாராக இருந்தோம்.
இருப்பினும், ஜெகபதி பாபு போன்ற மற்ற மூத்த நடிகர்களுடன் திட்டமிடப்பட்ட தேதிகளில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவரை பல முறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை.
என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை தொடர்பு கொண்டது இல்லை. பெரிய ஸ்டாராக இருந்தாலும் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தொழில் ரீதியாக மிக அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்கள். ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக் சென்னிடம் இல்லை.
இப்படி ஒரு விரோதமான சூழலில் அவரை வைத்து இந்தப் படத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறேன். எனினும் விஷ்வக் சென் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறேன். அந்த அளவுக்கு அவர் என்னையும், எனது குழுவையும் டார்ச்சர் செய்துள்ளார். இனிமேல் 100 கோடி கொடுத்தாலும் அவருடன் பணிபுரிய மாட்டேன்” என்று பொங்கித் தீர்த்துவிட்டார் அர்ஜூன்.