ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது தற்போது உலக சினிமாக்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் உத்தியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இது போன்று சமீபத்தில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ‘இரவின் நிழல்’ படத்தினை தயாரித்து, நடித்து வெளியிட்டிருந்தார். அந்த வரிசையில் இந்த ‘டிராமா’ படமும் சேர்கிறது.
இந்தப் படத்தில் நடிகர்கள் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா, வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா, மாஸ்டர் பிரவீன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தென் தமிழகத்தில் நாவினிப்பட்டி என்ற ஊரில் இருக்கும் காவல் நிலையம் அது. 3 ஏட்டுக்களும், 1 லேடி கான்ஸ்டபிள், 1 ஆண் கான்ஸ்டபிளையும் கொண்ட காவல் நிலையம். இப்போதுதான் இங்கே ஜெய் பாலா சப்-இன்ஸ்பெக்டராக போஸ்டிங் கிடைத்து வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
போலீஸ் ஏட்டுக்களான சார்லி, நகுலன் வின்சென்ட் இருவரும் சண்டைக் கோழிகள். வின்சென்ட் அசல் ரவுடி போலவே ஸ்டேஷனுக்குள் வலம் வருவதால் இருவருக்கும் ஆகவே ஆகாது.
ஜெய்பாலாவின் காதலியான காவ்யா பெல்லு அன்றைக்குப் பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள். தனக்கு இன்றைக்கு பிறந்த தினம் என்று சொல்ல உடனடியாக கேக் கொண்டு வரப்பட்டு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இடையில் திடீரென்று அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் மின் வயர்களில் அணில்களின் கூட்டம் விளையாடத் துவங்க.. மின்சாரம் தடைபடுகிறது.
மிகச் சரியான 4-வது நிமிடம் மின்சாரம் வந்துவிட்டாலும் அப்போது அந்த 4 நிமிடத்திற்குள்ளாக ஏட்டு சார்லி சமையலறையில் கொல்லப்பட்டிருக்கிறார். அனைவரும் விக்கித்துப் போகிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே போலீஸ் ஏட்டு கொலை என்றவுடன் அந்தப் பகுதி டி.எஸ்.பி.யான கிஷோர், தனது கீழதிகாரியான அஸிஸ்டெண்ட் டி.எஸ்.பி.யுடன் ஸ்டேஷனுக்கு வருகிறார்.
ஸ்டேஷன் கதவைச் சாத்திக் கொண்டு பிணத்தையும் அங்கேயே வைத்துக் கொண்டு அன்றைய இரவுக்குள் யார் கொலையாளி என்பதை டி.எஸ்.பி. கிஷோர் கண்டறிவதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நடிப்பென்று பார்த்தால் கிஷோரும், பெண் கான்ஸ்டபிளும்தான் கண் முன்னே வருகிறார்கள். தனது கெத்தான போலீஸ் அதிகாரி தோரணையில் அனைவரிடமும் விசாரிக்கும் பாங்கிலும், வின்சென்ட்டை மிரட்டி வழிக்குக் கொண்டு வரும் காட்சியிலும் ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் கிஷோர்.
அதேபோல் கோபக்கார கணவனுடன் சிக்கிக் கொண்டு அல்லல்படும் பெண் கான்ஸ்டபிள் தனது கஷ்டத்தைச் சொல்லி அழுவதும், அத்தனை பேரிடமும் நல்ல பெயர் எடுக்கும்விதத்தில் நடந்து கொள்வதிலும் தனது நடிப்பை முத்தாக சிந்தியிருக்கிறார்.
காதலியாக நடித்திருக்கும் காவ்யா பெல்லுவும், காதலனுடன் ஓடிப் போக எத்தனித்து முடியாமல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கும் மரியா பிரான்ஸும் அடுத்தக் கட்டமாக நடிப்பில் ஈர்க்கிறார்கள்.
கிளைமாக்ஸில் மரியா பிரான்ஸ் சொல்லும் கதையில் உண்மையிருந்தாலும் அவருடைய பேச்சுக்கு மற்றவர்களின் ரியாக்சனை காட்டாமலேயே கேமிரா தேங்கி நிற்பதால், அந்தக் காட்சியின் வீச்சு ரசிகர்கள் மனதில் ஏறவில்லை என்பது உண்மை.
வின்சென்ட் தனது ஸ்டைலான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். ஆனால் இது ஓவர் டோஸாகவும் இருக்கிறது. திருநங்கையான தனது உயரதிகாரியிடம் அவர் இரட்டை அர்த்தத்தில் பேசுவதெல்லாம் டூ மச்சான விஷயம். பின்பு இவரையே கூட்டணி சேர்த்துக் கொண்டு கொலையாளியைக் கண்டுபிடித்ததாக கடைசியில் சொல்வதும் காதில் பூ சுற்றிய கதைதான். சார்லி தனது ஜென்டில்மேன்ஷிப் நடிப்பைக் காண்பித்து நல்ல பெயரைத் தட்டிச் செல்கிறார்.
சிங்கிள் டேக் ஷாட் படம் என்பதால் ஒளிப்பதிவாளரை வெகுவாகப் பாராட்டியே தீர வேண்டும். காவல் நிலையத்தின் வாசல்வரையிலும் வந்து மீண்டும் உள்ளே செல்லும் அளவுக்கு வழியை வைத்துதான் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எப்போதும் ஒன்று போலிருக்கும் லைட் வசதிகள் என்பதால் ஒளிப்பதிவில் குறைவில்லைதான். அவரது அசராத உழைப்புக்கு நமது சல்யூட்..!
பாடலுக்காகவே கழைக் கூத்தாடி குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குள் கொண்டு வந்து ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார் இயக்குநர். அந்தப் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசைதான் சற்று இரைச்சலுடன் நம் காதைத் துளைக்கிறது.
சிங்கிள் டேக் ஷாட் படம் என்பதாலேயே அனைத்து அம்சங்களும் நிரம்பி வழிகின்றன என்று இந்தப் படத்தைச் சொல்லிவிட முடியாது. உண்மையாக சொல்லப் போனால் சிங்கிள் டேக் ஷாட்டுக்கு உரிய கதை இதுவல்ல.
போலீஸ் ஸ்டேஷனுக்குள் போலீஸ் ஏட்டுவே படுகொலை என்றால், அந்த ஸ்டேஷன் என்ன பாடுபட்டிருக்கும்..? போலீஸ் கமிஷனரே ஓடோடி வந்திருக்க மாட்டாரா…? அட.. அந்த பாடியை மார்ச்சுவரிக்கு எடுத்துப் போக ஆம்புலன்ஸாவது வர வேண்டாமா..? தடய அறிவியல் துறையினர் வந்து சோதனையிட வேண்டாமா..? செய்தியறிந்து மீடியாக்கள் வாசலில் வந்து மொய்த்திருக்க வேண்டாமா..?
இது எதையுமே செய்யாமல் வெறுமனே ஒரு டி.எஸ்.பி. மட்டுமே ஸ்டேஷனுக்குள் வந்து அமர்ந்து கொண்டு பாடியைக்கூட மருத்துவமனைக்குக் கொண்டு போகாமல் “இந்த இரவுக்குள் குற்றவாளியைக் கண்டறிகிறேன்…” என்று சொல்வதெல்லாம் என்ன மாதிரியான கதை, திரைக்கதை..?
எதிர்பார்த்ததுபோலவே காதலர்கள் இருவரில் ஒருவர்தான் கொலையாளி என்பதை இயக்கநரும் கடைசியில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் நீட் தேர்வு என்பதும் அந்தச் சூழலும் பொருத்தமாக இருக்கிறது என்றாலும் அந்த இடத்தில் ரசிகர்களுக்குக் கடத்தப்பட வேண்டிய உணர்வுகள் இல்லாததால் ஏதோ.. கோபம்.. பண்ணிட்டாங்க என்பதாக சாதாரணமான கொலையாகவே இது அடையாளம் காட்டப்படுள்ளது.
இவ்வளவு கடின உழைப்பைக் கொட்டி படத்தை உருவாக்கியிருக்கும் சூழலில், இந்தப் படத்தின் கதை, திரைக்கதையிலும் இதே உழைப்பைக் காட்டியிருக்கலாம்..!
RATING : 2.5 / 5