‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் ‘சீயான்’ விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களையும், ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.
இந்த விழாவில் இந்தப் படத்தை வெளியிடும் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்தப் படத்தின் பதினைந்து நிமிட காட்சிகளைப் பார்த்துவிட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும்.
‘விக்ரம்’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எப்படி அவரது ரசிகராக இருந்து இயக்கி வெற்றிப் பெற்றாரோ, அதே போல் இந்த ‘கோப்ரா’ படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து, விக்ரமின் ரசிகராகயிருந்து இயக்கியிருக்கிறார். அதனால் இந்தப் படமும் ‘விக்ரம்’ படத்தைப் போல பெரிய வெற்றியைப் பெறும்.
படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழுவினருக்கு வாழ்த்துகள். இயக்குநர் அஜய்க்கு நான் முதலில் சம்பளம் வழங்கியதாக கூறினார். அதற்கு பிறகு உங்களது சம்பளம் உயர்ந்துவிட்டது- ‘கோப்ரா’ படத்திற்கு பிறகு மேலும் உயரும். சம்பளத்தை அதிகமாக உயர்த்திவிடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.