“திரைப்படங்களில் யாரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ பேசக் கூடாது” என்று நடிகர் சந்தானம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘சபாபதி’ படம் வரும் வெள்ளிக்கிழமையன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் “ஜெய் பீம் பட விவகாரம் பற்றி உங்களது கருத்து என்ன..?” என்று கேள்வி சந்தானத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு சந்தானம் பதிலளித்தபோது, “ஜெய் பீம்’ படமென்று இல்லை, எந்தப் படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம்.. அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறானவர்கள்.. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றெல்லாம் பேசக் கூடாது.
யாரையும் உயர்த்தி பேசலாம். ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேச கூடாது. இதுதான் என் கருத்து.
ஏனென்றால், சினிமா என்பது 2 மணி நேரம் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது. உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம்.
இனி வரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நாம் நல்ல சினிமாவை தர வேண்டும். 2 மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து ஜாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாகத்தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன்…” என்றார்.