Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘வாலி’ பட ஹிந்தி ரீமேக்-போனி கபூருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாலி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1999-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் வாலி’. இந்தப் படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு இந்தப் படத்தை ஹிந்தியில் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார் போனி கபூர்.

இதை எதிர்த்து படத்தின் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏனெனில் வாலி’ திரைப்படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகவும் பிடித்த ஒரு படம். இது அவரது முதல் படம் மற்றும் அவருக்கு தமிழ்ச் சினிமாவில் பெரிய பிரேக்கை கொடுத்த படமும் இதுதான்.

இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதிலும், அஜித் நடிக்க விரும்பாதபட்சத்தில் தான் அதில் நடிக்கவும் ஆர்வமாக இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் வாலி’ படத் தயாரிப்பாளர் படத்தின் ரீமேக் உரிமத்தை போனி கபூருக்கு விற்றுவிட்டதால் ஹிந்தியில் ரீமேக் செய்வதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

படத்தின் கதை, திரைக்கதை, வசனகர்த்தா என்ற முறையில் என் அனுமதியில்லாமல் இந்தப் படத்தை வேறு எந்த மொழியிலும் யாரும் ரீமேக் செய்ய முடியாது…” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

ஆனால் உச்சநீதிமன்றமோ வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும்போதே, ஹிந்தி ரீமேக் படத்திற்கான வேலையைத் தொடங்குவதற்கு போனி கபூருக்கு அனுமதியளித்து ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இப்போது இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா அப்பீல் செய்யப் போவதாகத் தெரிகிறது.

இதற்காக ஆரண்ய காண்டம்’ படத்தின் ரீமேக் பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பினை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றத்தில் வாதிட உள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

அந்தத் தீர்ப்பில், “படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை ஸ்கிரிப்ட் ரைட்டருக்கே உரியது என்றும், ஸ்க்ரிப்ட் ரைட்டர் தயாரிப்பாளருக்கு உரிமையை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில், ஸ்கிரிப்ட் ரைட்டருக்குதான் ரீமேக் உரிமை உள்ளது…” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், படத்தின் ஸ்கிரிப்ட் உரிமையை தான் வைத்திருப்பதால் உச்சநீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

- Advertisement -

Read more

Local News