‘காலா’, ‘கபாலி’ என்று சுழன்றடித்த இயக்குநர் பா.ரஞ்சித் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்.
தற்போது ஆர்யாவை வைத்து ‘சார்பட்டா பரம்பரை’ என்னும் படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித், ஏற்கெனவே ஒரு வெப்சீரிஸையும் இயக்கி முடித்துள்ளார்.
அந்த வெப் சீரிஸ் அந்தாலஜி வகையைச் சேர்ந்தது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் இவர்களுடன் நான்காவது இயக்குநராக பா.ரஞ்சித்தும் சேர்ந்து அந்த வெப் சீரிஸைஇயக்கியிருக்கிறார்.
பா.ரஞ்சித்தின் வெப் சீரிஸில் குரு சோமசுந்தரம், கலையரசன், ஹரி, லிஸி ஆகியோர் நடித்துள்ளனராம்.
இது தவிர தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் 5 படங்களைத் தயாரித்து வருகிறார் பா.ரஞ்சித். இந்த 5 படங்களையுமே இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்களே இயக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள் முருகனின் கதையை அடிப்படையாக வைத்து ‘சேத்துமான்’ என்ற படம் உருவாகிறது. இந்தப் படத்தை தமிழ் என்னும் இயக்குநர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும்.
யாழி புரொடெக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘குதிரைவால்’ படத்தைத் தயாரித்துள்ளார் பா.ரஞ்சித். இந்தப் படத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்தாண்டு ஜனவரியில் ஒரு திரைப்படம் துவங்குகிறது. இதில் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார். இது விளையாட்டு சம்பந்தமான திரைப்படம்.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ லெனின் பாரதி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்தப் பட வேலைகளும் தயாராகி வருகின்றன.
கடைசியாக அறிமுக இயக்குநர் பிராங்ளின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் அடுத்தாண்டு துவங்கிவிடுமாம்.
இதற்கடுத்து தமிழ்ச் சினிமாவின் கனவுக் கன்னியான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுக்கவும் பா.ரஞ்சித் திட்டமிட்டு வருகிறாராம்.