Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

இயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட இயக்குநர் வசந்த பாலன் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதியான நாளில் இருந்து தனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த பாலன்.

தற்போது கொரோனா தொற்றின் வீரியம் குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டு.. ஆக்ஸிஜன் தேவைப்படாத நிலையில் ஓய்வில் இருக்கிறார் வசந்த பாலன்.

இந்த நிலையில் அவர் செயற்கை சுவாசத்தை ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், அவரைப் பார்ப்பதற்காக இன்னொரு இயக்குநரான லிங்குசாமி வந்திருந்தாராம்.

அது பற்றி இயக்குநர் வசந்தபாலன் இன்றைக்கு எழுதியிருக்கும் ஒரு பதிவு பலரது கண்களிலும் கண்ணீரை கசிய வைத்துவிட்டது.

இயக்குநர் வசந்த பாலன் எழுதியது இதுதான் :

வீரம் என்றால் என்ன..?

பயமில்லாத மாதிரி நடிக்கிறது.

பழைய வசனம்.

வீரம் என்றால் என்ன தெரியுமா..?

பேரன்பின் மிகுதியில்

நெருக்கடியான நேரத்தில்

அன்பானவர்கள் பக்கம் நிற்பது.

புதிய வசனம்.

போன வாரத்தில்

மருத்துவமனையின்

தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று

இரவு முழுக்க நித்திரையின்றி

இரவு மிருகமாய்

உழண்டவண்ணம் இருக்கிறது.

விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்

மருத்துவமனைத் தேடி விரைகிறது.

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது.

“தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது” என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது.

இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது.

“உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது”.

“பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள்” என்று இறைஞ்சுகிறது.

வேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே எனைப் பார்த்த வண்ணம் இருக்கிறது.

ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.

எனையே உற்றுப் பார்த்த வண்ணம் இருக்கிறது.

மருத்துவரா?

இல்லை

செவிலியரா?

என்று

எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

உள்ளிருந்து “டாக்டர்” என உச்சரிக்கிறேன்.

“லிங்குசாமிடா” என்றது அந்த குரல்.

அத்தனை சுவாசக் கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி “டே! நண்பா” என்று கத்தினேன்.

“பாலா” என்றான்.

அவன் குரல் உடைந்திருந்தது.

“வந்திருவடா…”

“ம்” என்றேன்.

என் உடலைத் தடவிக் கொடுத்தான்.

எனக்காக பிரார்த்தனை செய்தான்.

என் உடையாத கண்ணீர் பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த் துளி கசிந்தது.

“தைரியமாக இரு” என்று என்னிடம் சொல்லிவிட்டு செல்லும்போது யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.

இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று மனம் முப்பது ஆண்டுகள் முன்னே, பின்னே ஓடியது.

“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா…..” என்றேன்.

நானிருக்கிறேன். நாங்களிருக்கிறோம். என்றபடி  ஒரு சாமி  என் அறையை விட்டு வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது.

ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..

ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..

- Advertisement -

Read more

Local News