ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சி அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமருமா என்ற வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவோ, “சினிமாக்காரனை தலையில் தூக்கி வைச்சு ஆடாதே…” என்று தனது இனிய தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்கிறார்.
“நான் பிறந்த மண்ணுக்கு அடிக்கடி விசேஷத்துல கலந்துக்கப் போயிட்டு வருவேன். அப்போலாம் விசேஷ வீட்டு வாசல்கள்ல பெரிய, பெரிய கட் அவுட், ஃப்ளெக்ஸ் போர்டுகள்ல, யாராச்சும் ஒரு சினிமா நடிகன் சிரிச்சுட்டு நிப்பான்.
எனக்கு ஆச்சரியமா இருக்கும். `அட… கல்யாணப் பொண்ணுக்குத் தாய் மாமன் சினிமால நடிச்சுட்டு இருக்கான்போல. நமக்குத் தெரியாமப் போச்சே’னு நொந்துக்குவேன்.
உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போட்டோவைப் போட்டு பேனர் வைங்க. நான் கை தட்டுறேன். ஏன், நீ சினிமா நடிகனைக் கொண்டாடுற..? அப்புறம் நீ திண்டாடுறப்ப, `அவன் எனக்கு எதுவும் பண்ணலை’னு குத்தம் சொல்லுற..?
என் இனிய தமிழ் மக்களே… சினிமாக்காரங்க தன் தொழில்ல தெளிவா இருப்பாங்க. வேலையில் சின்சியரா இருப்பாங்க. அதைத் தாண்டி அவங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கக் கூடாதுங்கிற உண்மையை, பாவப்பட்ட தமிழன் என்னைக்குப் புரிஞ்சுக்கிறானோ… அன்னைக்குத்தான் அவனுக்கு விடிவு காலம் பிறக்கும்!” என்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.