Saturday, April 13, 2024

டப்பிங் பேச வராமல் டபாய்க்கும் நடிகர் சந்தானம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொதுவாக திரைப்படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கான சம்பளத்தில் பாதியை படத்தின் துவக்கத்திலும் மீதியை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பின்பும்தான் கொடுப்பது வழக்கம். உச்ச நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் நடைமுறை.

டப்பிங் பேசுவதற்கு முன்பாக மொத்தமுள்ள மீதித் தொகையையும் கொடுத்தால்தான் டப்பிங் பேசவே வருவேன் என்று சொல்லி கறாராய் சம்பளத்தை வசூலிக்கும் நட்சத்திரங்களும் திரையுலகத்தில் உண்டு. இதற்கு உதாரணமாக கவுண்டமணியைத்தான் சொல்வார்கள். மீதிப் பணம் அவர் கைக்குப் போகாமல், அவர் வீட்டில் இருந்து காரில் ஏற மாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்.

அந்த வரிசையில் இப்போது சந்தானமும் இணைந்திருக்கிறாராம். தற்போது தான் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளுக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறாராம் நடிகர் சந்தானம்.

ஒரு நாள் ‘தலைவலி’.. அடுத்த நாள் ‘காய்ச்சல்’.. மூன்றாவது நாள் ‘மூடு சரியில்லை’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறாராம். இத்தனைக்கும் படத்தின் முற்பாதி முழுவதும் சந்தானம் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இடைவேளைக்குப் பின்னான காட்சிகளுக்குத்தான் தற்போது டப்பிங் பேச வேண்டியிருக்கிறதாம்.

ஒருவேளை சம்பளப் பாக்கியிருக்குமோ என்று விசாரித்தால் அதுவும் இல்லை. மொத்தப் பணமும் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பாகவே சந்தானத்திற்கு செட்டில் செய்யப்பட்டுவிட்டதாம்.

பிறகென்னதான் பிரச்சினை என்று விசாரித்தபோது, சம்பளப் பாக்கி கதையைவிடவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் சிக்கியிருக்கிறது.

சந்தானம் நடித்து வெளியாகாமல் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ‘பிஸ்கோத்து’ ஆகிய திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாவது உறுதியாகிவிட்டதாம். இந்த நிலைமையில் மூன்றாவதாக இந்த ‘டிக்கிலோனா’ திரைப்படமும் தற்போது தயாராகி நின்றால், இதுவும் ஓடிடிக்கே போய்விடும் என்று சந்தானம் பயப்படுகிறாராம்.

வரிசையாக தனது அனைத்துப் படங்களும் ஓடிடியில் ரிலீஸானால் தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து போகும் நிலைமைக்கு போய்விடுமே என்றெண்ணிதான் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்திற்கு டப்பிங் பேச வராமல் தப்பிக்கிறாராம்.

சமீபத்தில் இந்தப் படத்தை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்தபோது பிரிவியூ தியேட்டரே சிரிப்பாய் சிரித்ததாம். அந்த அளவுக்கு நகைச்சுவை படத்தில் தெறிக்கிறதாம். இந்த அளவுக்கு சிறந்த படமாக இருக்கும்போது இதை எதற்கு ஓடிடியில் தள்ளிவிட வேண்டும்..? இந்தப் படம் தியேட்டருக்குத்தான் வர வேண்டும் என்று நினைக்கிறார் சந்தானம்.

ஆனால், தயாரிப்பாளரோ தியேட்டர்கள் இல்லையெனில் உடனேயே ஓடிடியில் வெளியீடு என்பதில் குறியாக இருக்கிறார்.

இந்த இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்..!

- Advertisement -

Read more

Local News