‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசும்போது, “இந்தப் ‘பொன்னியின் செல்வன்’ படம் மிக அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி. இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.
நமது வரலாற்றை, மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.