நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நாகேஷ், சொந்தமாக திரையரங்கம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தார். இறுதியில் தனது சம்பாத்தியம் அனைத்தையும் போட்டு, சென்னை தி.நகரில், தனது பெயரிலேயே திரையரங்கம் துவங்கினார்.
ஆனால் அத்திரையரங்கம் திறக்க இருந்த நேரத்தில், மாநகராட்சி அனுமதி ரத்து செய்யப்பட்டது. காரணம் அருகில் ஒரு பள்ளி இருப்பதால், அந்த இடத்தில் திரையரங்கம் வருவது சரியாக இருக்காது என காரணம் சொல்லப்பட்டது.
நாகேசுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எம்.ஜி.ஆரிடம் ஓடினார்.
“சட்டதிட்டங்கள் தெரிந்து தியேட்டர் கட்டமாட்டாயா” என கடிந்து திருப்பி அனுப்பிவிட்டார் எம்.ஜி.ஆர்.
சோகத்துடன் வீட்டுக்கு வந்தார் நாகேஸ். ஆனால் இரு நாட்களில் திரையரங்கத்துக்கு அனுமதி கிடைத்தது.
நெகிழ்வும் ஆச்சரியமுமாக எம்.ஜி.ஆரை சந்திக்க ஓடினார்.
அப்போது எம்.ஜி.ஆர்., “அந்த பள்ளிக்கு இன்னொரு வாசல் உண்டு. அந்த வாசலைத் திறந்து இந்த கதவை மூடச் சொல்லி விட்டோம். இது உனக்காக செய்தது அல்ல. நீண்ட நாட்களாகவே, திரையரங்கப் பகுதியில் நெரிசல் இருப்பதால் வழியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது இப்போது நிறைவேறிவிட்டது” என்று சிரித்தார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்ட நாகேஸ், நெகிழ்ச்சியில் கதறி அழுதுவிட்டார்.
காலத்தால் செய்த உதவி என்பார்கள்.. ஆனால் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் காலம் கடந்து நிற்பவை!