தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம்.
கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன்.
அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் பிறந்த தினம்.
1927-ம் ஆண்டு கண்ணதாசன் பிறக்க, அதற்கு ஒரு வருடம் தள்ளி 1928-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தார்.
சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த ‘பாலும் பழமும்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று தொடங்கும் பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசன், அந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவருமே அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். அப்படி அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்த அவர்களுடைய முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது.
அப்போது ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இசை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன் . எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும் அந்த மெட்டை கவிஞர்களிடம் வாசித்துக் காட்டி அந்த மெட்டுக்குரிய பாடலை அவர்களிடம் எழுதி வாங்குகின்ற வேலை அவருடையதாக இருந்தது.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘கன்னியின் காதலி’ என்ற படத்தில்தான் கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார். அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய முதல் இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடல்களை எழுதிய பிறகே எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். ஆகவே அவரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு விஸ்வநாதனுக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற மூன்றாவது பாட்டுதான் அவர்களுடைய முதல் சந்திப்பிற்கு வழி வகுத்தது.
பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் வாசித்துக் காண்பித்தவுடன் “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று அந்தப் பாடலுக்கான பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் கொடுத்தார் கண்ணதாசன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டிய மெட்டுக்கு அந்தப் பாடல் வரிகள் மிகச் சரியாக பொருந்தி இருந்தாலும் அந்தப் பல்லவியில் இடம் பெற்றிருந்த ‘களி’, ‘கூத்து’ போன்ற வார்த்தைகள் விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை.
“அது என்ன ‘களி’, ‘கூத்து’? அதெல்லாம் சரியாக இல்லை. மாற்றி எழுதிக் கொடுங்கள்” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னபோது அவரைப் பார்த்து கண்ணதாசன் முறைத்த முறைப்பில் விஸ்வநாதன் எரிந்து போகாமல் இருந்தது அதிசயம்தான் . அந்த அளவு கோபத்தோடு அவரைப் பார்த்து முறைத்தார் அவர். “நீயெல்லாம் எப்படி பாட்டை எழுதவேண்டுமென்று எனக்கு சொல்லித் தருகிறாயா?” என்ற கேள்வியும் அந்த முறைப்புக்குள் இருந்தது.
அப்போது விஸ்வநாதன் இருபத்தியோரு வயது இளைஞர். ஆகவே கண்ணதாசனின் முறைப்புக்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட அசரவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார் ஜுபிடர் பிக்சர்சில் ஆஸ்தான கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி.
“என்னடா பல்லவியை எழுதிட்டானா?” என்று விஸ்வநாதனைப் பார்த்து கேட்ட அவர் “எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்” என்றார். “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று கண்ணதாசன் எழுதியிருந்த பல்லவியை விஸ்வநாதன் படித்துக் காட்டிய உடன் “என்னடா இது ‘களி’, ‘கூத்து’ன்னு? இந்த வார்த்தைகள் எல்லாம் இவனுக்கு ஒத்து வராதே” என்று கண்ணதாசனைப் பார்த்து சொன்ன அவர் “சரி சரி அதை மாத்தி எழுதிக் கொடுத்து விடு” என்று கண்ணதாசனிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அவர் மேல் உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும் கண்ணதாசனால் அதை வெளியே காட்ட முடியவில்லை. அதற்கிடையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் வந்த உடுமலை நாராயணகவி “என்னடா மாத்தி எழுதி கொடுத்தானா இல்லையா?” என்று விஸ்வநாதனிடம் கேட்டார்
“இன்னும் எழுதித் தரவில்லை” என்று அவர் பதில் சொன்னதும் “சரி இப்படி மாத்திக்கோ” என்று சொல்லி விட்டு “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்பதற்கு பதிலாக “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு போட்டுப் பார்” என்றார் அவர்.
அவர் சொன்ன வார்த்தைகளை அந்த மெட்டுக்குள் பொருத்திப் பார்த்த விஸ்வநாதன் “ரொம்ப சரியாக இருக்கு” என்றார். உடுமலை நாராயண கவி எந்த அளவிற்கு பண்பாளர் என்பதற்கு அடையாளம் அடுத்து அவர் கண்ணதாசனைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தான்.
“காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்ற வார்த்தைகள்தான் கவிதை நயமிக்க அழகான வார்த்தைகள் என்பதெல்லாம் இந்த மடையன் விஸ்வநாதனுக்கு புரியாது. அவனை மாதிரி இருக்கிற மடையங்களுக்குத்தானே இந்தப் பாட்டு. அதனால அவங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான் அதை மாத்தி கேட்கிறான் அவன்” என்று கண்ணதாசனிடம் கூறினார் அவர்.
அதற்குப் பிறகு பல படங்களில் இணைந்து கண்ணதாசனும், விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினாலும் அவர்களது நட்பிலே நெருக்கம் உண்டானது ‘மகாதேவி’ படத்தில் பணியாற்றியபோதுதான்.
அந்தப் படத்திற்குப் பிறகுதான் கண்ணதாசனை ‘கவிஞரே’ என்று விஸ்வநாதனும் ‘விசு’ என்று விஸ்வநாதனை கண்ணதாசனும் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை தனி புத்தகமாகவே எழுதலாம்.
கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் இருந்த உறவு ஒரு பாடலாசிரியர்-இசையமைப்பாளர் என்பதை தாண்டிய ஒரு உறவு. அப்படி கண்ணதாசன் மீது நேசம் கொண்டிருந்த விஸ்வநாதன்தான் கவிஞர் வாலியின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது நட்பு,தொழில் ஆகிய இரண்டையும் எவ்வளவு அழகாக அவர் கையாண்டிருக்கிறார் என்று வியப்பு கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.
கண்ணதாசன் அறிமுகமானதில் இருந்தே பல படங்களில் பாட்டு எழுத அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் எல்லாம் மெட்டுக்கு பாட்டு எழுதும் சூழ்நிலையே இருந்தது. தனது பாட்டுச் சுதந்திரத்தை அந்த மெட்டுகள் பறிப்பதாக எண்ணினார் கவிஞர்.
ஒரு நாள் திடீரென்று விஸ்வநாதனை அழைத்த அவர் “டேய் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதில் மொத்தம் பத்துப் பாட்டுக்கள். அந்த பத்துப் பாடல்களையும் நான் முதலில் எழுதிக் கொடுத்துவிடுவேன். அந்த வரிகளுக்குத்தான் நீ மெட்டுப் போட வேண்டும் என்ன சரியா? இடையில இந்த பாட்டுக்கு மட்டும்நான் முதல்ல மெட்டுப் போட்டு விடுகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது…” என்றார் கண்ணதாசன்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். அப்படி உருவாகிய படம்தான் ‘மாலையிட்ட மங்கை’. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு மறு வாழ்வு தந்த அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே அவ்வளவு இனிமையாக அமைந்திருந்தன. “அந்தப் படம் வந்த பிறகுதான் என்னுடைய தொழிலில் இருந்த மந்த நிலைமை மாறி வெகு வேகமான முன்னேற்றம் பிறந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
‘மாலையிட்ட மங்கை’ படம் வெளியான அன்று பயத்துடன்தான் நான் ‘பாரகன்’ தியேட்டருக்குப் போனேன். டைட்டில் காட்டும்போதே மகாலிங்கத்தின் கம்பீரமான குரல் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்று முழங்கியது.படத்தைப் பார்க்க பெருவாரியாக வந்திருந்த கழகத் தோழர்கள் அனைவரும் பலமாக கை தட்டினார்கள். மகாலிங்கத்திடம் அவர்களுக்குப் பிரியம் வந்துவிட்டது. படத்தையும் பிரமாதமாக அவர்கள் ரசித்தார்கள் படமும் நன்றாக ஓடியது…” என்று குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.
கண்ணதாசனும், விஸ்வநாதனும் பாடல் ஒத்திகைக்காக அமர்ந்துவிட்டால் அந்த இடமே கலகலப்பாகிவிடும். ஒருவரையொருவர் அந்த அளவிற்கு கிண்டல் செய்து கொள்வார்கள்.
கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக அமைந்ததை விஸ்வநாதன் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? எந்த பாடலாசிரியராக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்பதானே எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூழ்நிலை என்றால் படத்தின் சூழ்நிலை அல்ல – பாடல் எழுதும்போது கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இருந்தாரோ அது அவரது பல பாடல்களில் எதிரொலித்திருக்கிறது.