Thursday, November 21, 2024

சினிமா வரலாறு-73 – ஜானகியை மணக்க எம்.ஜி.ஆருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ராஜகுமாரி’ திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெளியான முதல் திரைப்படம். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘அபிமன்யு’, ‘மோகினி’ ஆகிய படங்களில் ஒப்பந்தமானார் எம்.ஜி.ஆர்.

அந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  தவறாமல் சினிமா பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ஒரு நாள் ‘தியாகி’ என்ற படத்தைப் பார்த்தார். அந்த படத்தைப் பார்த்தபோது அந்தப் படத்தில்  நாயகியாக நடித்திருந்தவரின் முகம் அவருக்கு மிகவும்  தெரிந்த முகமாக இருந்தது. அவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று அவருக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் எங்கு பார்த்திருக்கிறோம் என்று அவ்வளவு எளிதாக அவரால் முடிவுக்கு வர முடியவில்லை.

படம் பார்த்த அன்று இரவு முழுவதும் அந்த நாயகியின் கண்களும், அவரது அழகான தோற்றமும் அவர் மனக் கண்ணுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன.

இப்படி இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருந்தபோதுதான் அந்தக் கதாநாயகிக்கும், தனது முதல் மனைவியான தங்கமணிக்கும் இருந்த உருவ ஒற்றுமை அவருக்கு புரிந்தது.

தன்னுடைய முதல் மனைவியின் அதே உயரம், அதே கண்கள். அதே உடல் அமைப்பு கொண்ட அந்த நடிகையை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று அந்த நொடி முதல் துடிக்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

‘தியாகி’ படத்தில் ஒரு தலித் பெண்ணின் வேடத்தில் நடித்திருந்த அந்த நடிகையின் பெயர் வி.என் ஜானகி.

இதற்கிடையில் லஷ்மிகாந்தனின் கொலை வழக்கிலிருந்து விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார். அந்தப்   படத்திலே தியாகராஜ பாகவதரின் அண்டை நாட்டை ஆண்ட  மகேந்திரவர்மன் என்னும்  மன்னனின் பாத்திரத்திலே நடிக்க எம்.ஜி.ஆரை  அவர் ஒப்பந்தம் செய்தார்.

தியாகராஜா பாகவதர் சிறைவாசம் முடிந்து அப்போதுதான்  வெளியே வந்திருந்தார் என்பதால் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த அவர்  விரும்பவில்லை. ஆறு மாத காலம் பூனாவில் தங்கி மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பும் திட்டத்துடன் புறப்பட்ட அவருடன் எம்.ஜி.ஆரும்  பூனாவிற்குக் கிளம்பினார்.

‘தியாகி’ படத்தைப் பார்த்த நாளிலிருந்து தனது முதல் மனைவியின் தோற்றத்தில் இருந்த அந்தப் பட நாயகியை  ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த எம்,ஜி,ஆரி-ன் ஆசையை அந்த பயணம் நிறைவேற்றி வைக்கப் போகிறது என்று பூனாவிற்கு போய் சேர்கின்றவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது.

தியாகராஜ பாகவதரின் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன் அவர்களின் தம்பியான  ராஜகோபாலனின் மகளான  வி.என்.ஜானகியை பூனாவில் நடைபெற்ற  ‘ராஜமுக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் முதல்முறையாக  நேரில்  பார்த்த எம்.ஜி.ஆர்., அப்படியே அசந்து போய் நின்றுவிட்டார்.

அதற்குக் காரணம் அவரது முதல் மனைவியான பார்கவி என்கிற தங்கமணிக்கும் ஜானகிக்கும் இருந்த உருவ ஒற்றுமை. ஆண்டவனின் படைப்பில் இப்படி ஒரு அதிசயமா என்று ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார் எம்.ஜி.ஆர்.

ஜானகி மீது அவருக்கு அளவில்லாத அன்பும், பாசமும் தோன்ற அந்த தோற்ற ஒற்றுமை முதல் காரணமாக அமைந்தது. ‘ராஜமுக்தி’ படத்தைத் தொடர்ந்து ‘மோகினி’ திரைப்படத்திலும் ‘மருத நாட்டு இளவரசி’ படத்திலும் ஜானகியுடன் ஜோடியாக நடித்தபோது அந்த அன்பு காதலாக மாறியது.

ஆனால் அந்தக் காதல் நிறைவேறுவதற்குள் எண்ணற்ற போராட்டங்களையும் பிரச்னைகளையும்  சந்தித்தார் எம்.ஜி.ஆர்.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘மோகினி’  திரைப்படம்தான் எம்.ஜிஆர்-ஜானகி இருவரும் ஜோடியாக நடித்து வெளிவந்த முதல் படம். அந்தப் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரைவிட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் வி.என்.ஜானகி. ஆனால், அந்த வித்தியாசங்களை எல்லாம் மீறி அவர்களுக்கிடையே  காதல் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

‘மோகினி’ திரைப்படத்தைத் தொடர்ந்து  ‘மருத நாட்டு இளவரசி’  படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்திருந்தார்கள்  என்றாலும் அந்த படம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை.

முதலில் அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தவர் தஞ்சையைச் சேர்ந்த பிரபல பாடகியான  அனுராதா. அப்போது அந்தப் படத்திற்கு சூட்டப்பட்டிருந்த பெயர் ‘காளிதாசி’.

‘மருத நாட்டு இளவரசி’ படம் ஆரம்பிக்கப்பட்டபோது அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் அந்தப் பட நிறுவனத்தில் பங்குதாராராக இருந்த டி.வி.சாரி. அவர்தான் எம்.ஜி.ஆரை அந்தப் படத்தின் கதாநாயகன் வேடத்துக்கு சிபாரிசு செய்தவர்.

கழுத்தில் துளசி மாலையுடன், கதர் ஆடை அணிந்திருந்த எம்.ஜிஆரை பார்த்துடேனேயே அந்தப் படத்தின் தயாரிப்பாளரான முத்துசாமிக்கு  பிடித்துவிட்டது. ஆகவே, நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் அந்தப் படத்தின்  நாயகனாக எம்.ஜி.ஆரை அவர் ஒப்பந்தம் செய்தார்.

அந்த நிறுவனத்துக்கு மூளையாக செயல்பட்ட அவரது யோசனைப்படி மைசூர் நவ ஜோதி ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தனர். இந்த நவ ஜோதி ஸ்டுடியோதான் பின்னர் பிரிமியர் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றம் பெற்றது.

படத்திற்கான கதை, வசனத்தை  முழுமையாக  எழுதித் தராமல் இழுத்தடித்தது மட்டுமின்றி  “முழுக் கதையும் என் மனதிலே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதை எழுதித் தருகிறேன்” என்று அவர் சொன்ன பதிலால்  ஆத்திரம் அடைந்த தயாரிப்பாளர் முத்துசாமியின் அண்ணன் அவரை வெளியே போகச் சொல்லி விடவே  அந்த கம்பெனி கலைக்கப்பட்டது.

அதன் பிறகு கோவிந்தன் கம்பெனி என்ற பட நிறுவனத்தினர் ‘காளிதாசி’ படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த பாடல்களையும், சில காட்சிகளையும் அப்படியே வைத்துக் கொண்டு அந்தப் படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

படத்திற்கு கதை, வசனம் எழுத புதிய கதாசிரியர் ஒருவரை அவர்கள் தேடியபோது ‘ராஜகுமாரி’, ‘அபிமன்யு’ ஆகிய  திரைப்படங்களில்  உணர்ச்சிப்பூர்வமான வசனங்களை எழுதியிருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வசனம் எழுதும் ஆற்றலைப்  பற்றி எடுத்துச் சொல்லி அவரது பெயரை சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் சிபாரிசை அப்போது தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருந்த முத்துசாமி ஏற்றுக் கொள்ளவே உடனே புறப்பட்டு வரச் சொல்லி கலைஞருக்கு ஒரு தந்தி அடித்தார் எம்.ஜி.ஆர்.  அவர் புறப்பட்டு வருவதற்குள் முத்துசாமி ஊருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால் கலைஞருக்கு முன் பணம்கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாடார் மேன்ஷனில் தங்கிக் கொண்டு  தினமும் இரவெல்லாம்  கதையை எழுதத் தொடங்கினார் அவர்.

முதலில் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கதாசிரியர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியாக எழுதித் தந்த நிலையில் படத்திற்கான மொத்த வசனத்தையும் ஒரே வாரத்தில் கலைஞர் எழுதி முடித்து விட்டார்.

அந்தப் படத்திற்கு கதை, வசனகர்த்தாவை மட்டுமின்றி கதாநாயகியையும் பரிந்துரைத்தவர் எம்.ஜி.ஆர்.தான். அவருக்கும் வி.என்.ஜானகிக்கும் இடையே பூத்திருந்த காதல்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்தப் படத்திற்கு பின்னர் வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்த அவர்கள் இருவரது பெயரும் திரையில் இணைந்து  இடம் பெற்ற படமாக ‘மருத நாட்டு இளவரசி’ படம் அமைந்தது.

‘மருத நாட்டு இளவரசி’ படம் ‘காளிதாசி’ என்ற பெயரிலே தயாரிக்கப்பட்டபோது அந்த படத்தில்  பணியாற்றிய ஒரு பெண் எம்.ஜி.ஆர்., மீது தீவிரமாகக் காதல் கொண்டிருந்தாள். “நீங்கள் சரி என்று சொன்னால் உங்களை மணந்து கொண்டு உங்களுடன் வாழ்க்கை நடத்தத் தயாராக இருக்கிறேன்” என்று வெளிப்படையாக சொன்ன அந்தப் பெண்ணிடம் “உன்னை என்னால்  ஏற்றுக்  கொள்ள முடியாது. என்னை மன்னித்துக் கொள் ” என்று அப்போதே கூறிவிட்டார் எம் ஜி ஆர்.

ஆனால் எம்.ஜி.ஆர். மனதில் வி.என்.ஜானகி இடம் பிடித்த பின்னரும் மனம் தளராது முயற்சி செய்து கொண்டிருந்த அந்தப்  பெண் ‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நவஜோதி ஸ்டுடியோவிற்கு மிக அருகிலேயே குடி இருந்ததால் எம்ஜிஆரின் நடவடிக்கைகள் அனைத்தையும் பக்கத்தில் இருந்து கவனித்தபடி  இருந்தார்.

நாள் தவறாமல் தனது வீட்டுக்கு வரும்படி எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் சில சமயங்களில் எம்.ஜி.ஆர் மனதை உருக்கும் அளவிற்கு கடிதங்கள் எழுதி அவருக்கு அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்தாள்.

இப்படிப்பட்ட பிரச்சினையில் எம்.ஜி.ஆர். சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது ஜானகியை எம்.ஜி.ஆர். திருமணம் செய்து கொள்வதை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த ஜானகியின் தாய் மாமனான நாராயணன் என்பவர் ஜானகியை  எம்.ஜி.ஆர். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் என்னென்ன நிபந்தனைகளுக்கு அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது குறித்து  பேசுவதற்காக எம்.ஜி.ஆரை நேராக வரச் சொன்னார். 

எம்.ஜி.ஆர் ஜானகியை காதலிப்பது அப்போது ஜானகியிடம் இருந்த பணத்திற்காகவும், எதிர்காலத்தில் ஜானகி சம்பாதிக்கக் கூடிய பணத்திற்காகவும்தான் என்பது அவரது தாய் மாமாவின்  எண்ணமாக இருந்தது.

இரவு ஏழு மணியளவில் அவரை சந்திக்க எம்.ஜி.ஆர்  போனதும் ஏற்கனவே டைப் அடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்த்ததை எடுத்து எம்ஜிஆரிடம் நீட்டினார் அவர்.

அதைப் படிக்கப் படிக்க எம்ஜிஆரின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.

“என்னை அடிமை வியாபாரியா ஆக்கலாம்னு நினைக்கறீங்களா?” என்று அவரைப் பார்த்து ஆத்திரத்துடன் எம்.ஜி.ஆர் கேட்க கதவுக்குப் பக்கத்திலே கண்ணீருடன் நின்று கொண்டிருந்த வி.என்.ஜானகி, ‘அப்படியெல்லாம் பேச வேண்டாம்’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து சைகை செய்தார்.

எம்.ஜி.ஆர். அப்படி ஆத்திரம் கொள்கின்ற அளவிற்கு அந்த ஒப்பந்தத்தில் அப்படி  என்ன எழுதப்பட்டிருந்தது…?

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News