1956-ம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய கடும் புயலில் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தடுமாறிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு உதவுவதற்காக எல்லோரும் புயல் நிவாரணத்திற்கு நிதி வசூல் செய்து தாருங்கள் என்று அண்ணா அறிக்கை விட்டார்.
அப்போது சிவாஜி கணேசன் திராவிட முன்னேற்றக் கழகத்திலே உறுப்பினர் இல்லை என்றாலும் அறிஞர் அண்ணா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். ஆகவே அண்ணாவின் அறிக்கையைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு விருதுநகர் வீதிகளிலே தெருத்தெருவாக அலைந்து ‘பராசக்தி’ பட வசனங்களை எல்லாம் பேசி நிதி சேர்த்தார்.
பின்னர் அந்தத் தொகையை அறிஞர் அண்ணாவிடம் சேர்க்கச் சொல்லி அனுப்பி விட்டு சேலத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சிவாஜி சேலத்திற்கு போய்விட்டார்.
அவர் அங்கே படப்பிடிப்பில் இருந்தபோது புயல் நிவாரண நிதிக்கு அதிகமாக நிதி வசூலித்துத் தந்தவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழாவை அறிஞர் அண்ணா நடத்த இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.
உண்மையில் அந்த புயல் நிவாரண நிதிக்கு அதிகமாக நிதி சேர்த்துத் தந்தவர் சிவாஜிதான் என்பதால் அந்த விழாவிலே கலந்து கொள்ள நிச்சயம் தனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து சேலத்திலே காத்துக் கொண்டிருந்தார் சிவாஜி. ஆனால் விழா நாள் அன்று காலைவரை அவருக்கு அழைப்பு வரவில்லை.
ஒரு வேளை அழைப்பிதழை சென்னையில் உள்ள தனது வீட்டில் கொடுத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தனது தாயாரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “இன்று மாலை நடைபெறும் விழாவுக்கு யாராவது அழைப்பிதழைக் கொண்டு கொடுத்தார்களா?” என்று கேட்டார் சிவாஜி. “யாரும் எதுவும் கொண்டு வந்து கொடுக்கவில்லையே..” என்றார் அவருடைய தாயார்.
மதியத்துக்கு மேல் சென்னையில் உள்ள வீட்டுக்கு நேரடியாக வந்து விழாவிலே கலந்து கொள்ள அழைத்தார்கள் என்றால் சேலத்திலிருந்து அப்போது கிளம்பிப் போய் எப்படி அந்த பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள முடியும் என்று எண்ணிய சிவாஜி காலையில் சேலத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு மதியம் நான்கு மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்.
அப்படி அவர் புறப்பட்டு வந்ததற்கு முக்கியமான காரணம் தன்னை அழைக்காமல் அந்த விழாவை நடத்த மாட்டார்கள் என்பதில் அவருக்கு இருந்த நம்பிக்கை.
நான்கு மணி முதல் விழாவிற்கு கூப்பிட யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்து வாயிலைப் பார்த்தபடியே வீட்டில் காத்துக் கொண்டிருந்தார் சிவாஜி. ஆனால் மாலை ஆறு மணிவரையிலே அவருக்கு அழைப்பும் வரவில்லை. அவரை விழாவிற்கு அழைத்துப் போக ஆட்களும் வரவில்லை அதற்குப் பிறகு நடந்தது என்ன எனபதைப் பற்றி தனது சுயசரிதை நூலில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் சிவாஜி.
“மாலை ஆறு மணிக்கு பாராட்டுக் கூட்டம் நடக்கிறது. அப்போதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்த கூட்டத்திலே மேடையேற்றி கவுரவிக்கிறார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களை அந்த கூட்டத்திலே மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.
“எங்கே கணேசன் வரவில்லையா?” என்று அண்ணா கேட்டபோது “இல்லை.. வர முடியவில்லை என்று சொல்லி விட்டார்” என்று அண்ணாவிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்போது அண்ணாவைச் சுற்றியிருந்த சிலர் அண்ணாவிடமிருந்து என்னைப் பிரித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார்கள்.
அன்று நடந்த அந்தச் சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. நான் எல்லா அவமதிப்பையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. அந்த நிகழ்ச்சியால் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். ஏனென்றால் சின்னப் பிள்ளையிலிருந்து அந்த இயக்கத்திலே ஒட்டிக் கொண்டிருந்தவன் நான். என்னைத் தூக்கிப் போட்டுவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆரைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அன்று நடந்த அந்த சம்பவத்துக்கு அண்ணன் எம்.ஜி.ஆர். காரணமில்லை.“ என்று அந்த நூலிலே தனது மன வேதனையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சிவாஜி.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பைத்தியம் பிடித்தவர் போல சிவாஜி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த இயக்குநர் ஏ.பீம்சிங் “கணேசா… ஏன் இப்படி நிலை குலைந்து போய் இருக்கிறாய்? வா.. திருப்பதி போய் வரலாம்” என்று சிவாஜியை அழைத்தார்.
“நான் சாமி கும்பிடும் மன நிலையில் இப்போது இல்லை” என்று சிவாஜி திரும்பத் திரும்பச் சொன்ன போதும் அவரை விடாமல் வற்புறுத்தி திருப்பதிக்கு அழைத்துச் சென்று விட்டார் பீம்சிங். அவர்கள் திருப்பதிக்கு கிளம்பிய அன்று கடும் மழை காரணமாக வழியெங்கும் வெள்ளக் காடாக இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர்களால் மறு நாள் காலை நான்கு மணிக்குத்தான் திருப்பதியை அடைய முடிந்தது.
இத்தனை பிரச்னைகளுக்கு நடுவே பதினாறு மணி நேரம் பயணம் செய்து சிவாஜி மேற்கொண்ட அந்த திருப்பதிப் பயணம் அவ்வளவு பெரிய திருப்பங்களை தனது வாழ்க்கையில் உண்டு பண்ணப் போகிறது என்று சிவாஜி உட்பட யாருமே கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
திருப்பதி கோவில் வாசலில் சிவாஜியைப் பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபர் தனது பத்திரிகைக்கு அந்தச் செய்தியைத் தெரிவிக்க சிவாஜி திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பியபோது “நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்” என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக சிவாஜி திருப்பதி சென்றதைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.
அப்போது சிவாஜிக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்ற போதிலும் சிவாஜி திருப்பதிக்கு சென்றதைப் பற்றி அமிலம் போன்று எரித்து விடக் கூடிய வார்த்தைகளால் சிவாஜியை மனம் போனபடி தன்னுடைய “தென்றல்” பத்திரிகையில் தாக்கி எழுதினார் கண்ணதாசன்.
அத்தோடு கண்ணதாசன் நின்றிருந்தால்கூட சிவாஜி பெரிதாக அவர் மீது ஆத்திரப்பட்டிருக்கமாட்டார். சிவாஜி படுகுழியில் புதைந்திருப்பதைப் போன்ற ‘தெனாலிராமன்’ படத்தின் புகைப்படத்தைப் பத்திரிகையிலே வெளியிட்டு அதற்குப் பக்கத்திலே “கணேசா இதுதான் உன்னுடைய எதிர்காலமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதைப் பார்த்த சிவாஜி அளவில்லாத ஆத்திரம் அடைந்தார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிவாஜி, வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தது தெரியாமல் அந்த ஸ்டுடியோவிற்குள்ளே அடி எடுத்து வைத்தார் கண்ணதாசன். அவர் ஸ்டுடியோவிற்குள்ளே வந்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன் ஆத்திரத்தோடு தன்னுடைய படப்பிடிப்பு தளத்திலிருந்து சிவாஜி வெளியே ஓடி வர அவர் அப்படி வருவதைப் பார்த்த கண்ணதாசன் அவருடைய கையில் சிக்கினால் நிச்சயம் பிரச்னைதான் என்ற பயத்தில் அருகில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்குள் ஓடிவிட்டார்.
அங்கேயும் அவரை விடாமல் துரத்திய சிவாஜி “அவனை ஒரு அடியாவது அடிக்காமல் என் மனம் ஆறாது” என்று குமுற அவரைத் தடுத்து நிறுத்திய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் “அவனை அடிச்சிட்டா எல்லாம் சரியாகிவிடுமா? ஆத்திரத்தில் அறிவில்லாமல் எதையாவது செய்யாதே.. உனக்கும், அவனுக்கும் என்ன பிரச்னை..? அதை முதலில் அதை என்னிடம் சொல்” என்றார்.
‘தெனாலி ராமன்’ படத்தின் புகைப்படத்தைப் போட்டு கண்ணதாசன் தன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் பற்றி எல்லாம் அவரிடம் விளக்கமாக சிவாஜி சொல்ல “இவன் எழுதிட்டான்னா அது அப்படியே நடந்துடுமா..? அதையெல்லாம் போய் பெரிசாக எடுத்துக்கிட்டு” என்று சிவாஜியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த கலைவாணர், “உனக்கு சிவாஜியின் கொள்கை பிடிக்கலேன்னா நீ ஒதுங்கிக்க. அதை விட்டுட்டு அவனை எதுக்காக பத்திரிகையிலே திட்டறே..? நீ வெறும் பத்திரிகைக்காரனாக மட்டும் இருந்தா பரவாயில்லை. சினிமால கதை, வசனம், பாட்டு எல்லாம் எழுதிக்கிட்டிருக்கே. அப்படி இருக்கும்போது தேவையில்லாமல் எல்லோருடைய விரோதத்தையும் தேடிக் கொள்ளாதே” என்று கண்ணதாசனுக்கு புத்திமதி கூறினார்.
சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் இடையே நடந்தது வெறும் வாக்குவாதம்தான் என்ற போதிலும் மறுநாள் எல்லா பத்திரிகைகளிலும் சிவாஜி, கண்ணதாசன் ஆகிய இருவரும் செருப்பால் அடித்துக் கொண்டு சண்டை போட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
சிவாஜியை மிகவும் கடுமையாகத் தாக்கி கண்ணதாசன் விமர்சித்திருந்த போதிலும் தன்னுடைய படங்களுக்கு பாட்டெழுத கண்ணதாசனை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சிவாஜி தன்னுடைய தயாரிப்பாளர்கள் எவரிடமும் கூறவில்லை.
ஆனாலும் அவர்கள் இருவருக்கும் கடுமையான மோதல் நடந்ததாகப் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்த சிவாஜி படத் தயாரிப்பாளர்கள் கண்ணதாசனை தங்களது படங்களில் தவிர்க்கத் தொடங்கினார்கள்.
1957-ம் ஆண்டிலும் 1958-ம் ஆண்டிலும் சிவாஜி நடித்த படங்களில் ‘அம்பிகாபதி’ படம் தவிர சிவாஜி நடித்த வேறு எந்த படத்திலும் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெறவில்லை.
ஏறக்குறைய மூன்றாண்டுகள் பிரிந்திருந்த அவர்களை மீண்டும் சேர்த்து வைத்தவர் அந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு வகையில் காரணமான ‘அந்த’ இயக்குநர்தான்.
(தொடரும்)