சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் தான் வாங்கியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவரை சராமரியாகக் கேள்வி கேட்டு அவரது மனுவை டிஸ்மிஸ் செய்து அபாரதமும் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இப்போது தனுஷின் முறை. நடிகர் தனுஷும் விஜய் போலவே 2015-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். இந்தக் காருக்கு தமிழக வணிக வரித் துறை 60.66 லட்சம் ரூபாயை வரியாகக் கட்டும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் துவக்க நிலையிலேயே இந்த வரியில் 50 சதவிகிதத்தை முதலில் செலுத்த வேண்டும் என்றும். அதன் பின்பு அந்தக் காரை பதிவு செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படியே வரியில் பாதி தொகையான 30.33 லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தினார். இதையடுத்து கார் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்பு தனுஷ் இந்தக் காரில் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்த மாரி-2 படத்தில்கூட இந்தக் காரில் வந்து இறங்குவது போன்ற ஒரு காட்சியும் இருந்தது.
விஜய் வழக்கை விசாரித்த அதே நீதிபதியான சுப்ரமணியம்தான் இந்த வழக்கையும் விசாரித்து வந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது.
இதற்கிடையில் நடிகர் விஜய்க்கு இதே மாதிரியான வழக்கில் என்ன தீர்ப்பு வந்ததை அறிந்திருந்த தனுஷ் தான் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற முடிவு செய்திருந்தார். அதனை இன்று நீதிபதியிடம் அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அப்போது நீதிபதி தனுஷ் தரப்பு வழக்கறிஞரிடம் சராமரியான கேள்விகளை எழுப்பினார். “கார் வாங்கும் மனுவில் என்ன பணியில் இருக்கிறீர்கள் என ஏன் குறிப்பிடவில்லையே..? பணியை அல்லது தொழிலைக் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா..?
மக்கள் வரிப் பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே…? சோப்பு வாங்கினால்கூட இந்தியாவில் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு எந்த சாமனிய மனிதனும் வரி விலக்கு கேட்டு வழக்கு போடுவதில்லை… நீங்கள் எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஹெலிகாப்டரைக்கூட வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான வரியை கட்டுங்கள்.
நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின், தற்போது அதனை வாபஸ் பெற எப்படி அனுமதிக்க முடியும்…? பால்காரர் உள்ளிட்ட ஏழைகள்கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தும்போது அதனை செலுத்த முடியவில்லை என ஏன் நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள்..?” என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.
அதைத் தொடர்ந்து, பணியைக் குறிப்பிடாமல் மறைத்தது ஏன் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு என்பது குறித்து இன்று மதியத்திற்குள் நடிகர் தனுஷ் தரப்பிடம் வணிக வரித்துறை ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும், வணிக வரித்துறையின் கணக்கீட்டு அதிகாரியை இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் போலவேதான் தனுஷும் இந்த வழக்கைக் கையாண்டிருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.