மறைந்த பிரபல நடிகர் சந்திரபாபுவின் நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அவரது திரைப்படங்களைவிட அவரது வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய கதைகள் பல உலவுகின்றன.
பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள் கதையே, சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்ததுதான் என்றும் சொல்வார்கள்.
அதாவது, முதலிரவு அன்று, மணப்பெண் தனது காதலனைப் பற்றி கூற… மணமகன் அதிர்ச்சி அடையாமல், அந்த காதலனுடன் மனைவியை சேர்த்துவைக்க முயல்வதுதான் கதை.
“இப்படித்தான் நிஜ வாழ்க்கையில் செய்தார் சந்திரபாபு..” என்று நெகிழ்பவர்கள் உண்டு.
ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு.
இது குறித்து, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும் திரைப்பட இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பேசியதில் இருந்து..
“ 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார். பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். ஏற்கெனவே தனக்கு இருந்த காதல்கள் குறித்து சந்திரபாபு கூறினார். மனைவியிடமும் மனம் திறந்து பேசுமாறு கூறினார்.
கணவர் இவ்வளவு வெளிப்படையாக பேசும்போது, நாம் எதையும் மறைக்கக்கூடாது என நினைத்த மனைவிய, தனக்கு இருந்த காதல் பற்றி கூறினார்.
இதை எதிர்பார்க்காத சந்திரபாபு, ஆத்திரமாக, முதலிரவு அன்றே மனைவியை வெளியில் தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டார்.
சந்திரபாபு மற்றும் அவரது மனைவிக்கு காட் பாதராக இருந்தவர், கே.சுப்ரமணியன். அவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் சந்திரபாபு, ‘சேர்ந்து வாழச் சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றார். ஆகவே தம்பதி, முதலிரவோடு பிரிந்தனர்.
அந்த பெண்மணி பிறகு லண்டன் சென்று படித்தார்.
இந்த விசயத்தை, கே.சுப்ரமணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயக்குநர் பழமுதிர் சோமநாதன் பதிவு செய்து உள்ளார்” என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்ய தகவல்களுக்கு touring talkies யு டியுப் சேனல் பாருங்கள்..