Friday, April 12, 2024

சக்ரா – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்க.. நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், மற்றும்  ரெஜினா காசன்ட்ரா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, விஜயபாபு, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம், படத் தொகுப்பு – சமீர் முகமது, கலை இயக்கம் – எஸ்.கண்ணன்,   சண்டைக் காட்சிகள் – அனல் அரசு, மக்கள் தொடர்பு – ஜான்ஸன்.

தொழில்  நுட்ப திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநரான ஆனந்தன் இயக்கியுள்ளார். இவர், இயக்குர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று காலையில்  சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் 50 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இரண்டு நபர்கள். ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். அடையாளம் தெரியவில்லை.

கொள்ளையடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திலும் முதியவர்கள் மட்டுமே இருந்தனர். நகை, பணம் எங்கேயிருக்கிறது என்பதைக்கூட தெளிவாகத் தெரிந்து வைத்திருந்து அதிகமாக நேரத்தை செலவழிக்காமல் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.

இந்தக் கொள்ளையர்கள் இந்திய ராணுவத்தில் தொழில் நுட்பப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றும் விஷாலின் வீட்டிலும் திருடியிருக்கிறார்கள். விஷாலின் அப்பா வாங்கியிருந்த மேஜர் சக்ரா விருதினையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். தடுக்கப் போன விஷாலின் பாட்டி கே.ஆர்.விஜயாவை அவர்கள் தாக்கிவிட அவர் நினைவிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

விஷயம் கேள்விப்பட்டு விஷால் சென்னைக்கு ஓடோடி வருகிறார். வந்த இடத்தில் பாட்டியைப் பார்க்கிறார். இந்தத் திருட்டுக்களைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்டுள்ள டீமின் தலைவியான அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஷ்ரத்தாவையும் பார்க்கிறார்.

இதே ஷ்ரத்தாவுடன் சில மாதங்களுக்கு கல்யாணம் நிச்சயத்தார்த்தம்வரையிலும்போய் ஷ்ரத்தாவின் சித்தப்பா மனோபாலாவுடன் ஏற்பட்ட பிணக்கினால் திருமணம் நின்று போயிருந்தது. ஆனால், காதல் மட்டும் அவர்கள் இருவருக்குமிடையில் அப்படியேதான் இருக்கிறது.

திருடர்களைப் பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள் காவல் துறையில். அவர்களுக்குத் துணையாக நிற்க விஷாலும் களமிறங்குகிறார். அது அவ்வளவு சாமான்யமான விஷயமாகத் தெரியவில்லை.

ஆனாலும் விஷால் தனது நுண்ணறிவால் எதிரியின் கோட்டைவரையிலும் சென்றுவிடுகிறார். ஆனால் அங்கே போன பின்புதான் மிகப் பெரிய உண்மை அவருக்குத் தெரிய வருகிறது.

இப்போது அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனுக்கும், விஷாலுக்கும் இடையே பூனை-எலி விரட்டு காட்சிகள் தொடர்கிறது. கடைசியாக இந்தக் கொள்ளைக் கும்பலை விஷால் அண்ட் டீம் எப்படிப் பிடிக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியின் கதை.

‘இரும்புத் திரை’ கொடுத்த தைரியத்தில் அதேபோன்ற கிரைம் சம்பந்தப்பட்ட கதையாக தேர்ந்தெடுத்து அதைக் கச்சிதமாக விறுவிறுப்பு குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன்.

ராணுவ கேப்டனுக்குரிய தோற்றம் விஷாலுக்கு கை கொடுத்திருக்கிறது. சண்டை காட்சிகளில் அனல் பறக்க உழைத்திருக்கிறார். சண்டை இயக்குநருக்கு ஒரு நன்றி. தனக்காகவே அளவெடுத்து தைத்தது போன்ற திரைக்கதையை இயக்குநரிடம் இருந்து பெற்றிருக்கிறார் விஷால்.

இதனாலேயே பல காட்சிகளை விஷாலே முடிவு செய்து வெளியில் சொல்ல.. அதுதான் அடுத்தடுத்த காட்சிகளில் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகளை கேள்விக்குள்ளாக்கும் ஒரு காட்சியில்தான் குறிப்பாக நடித்திருக்கிறார். கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாகிகளை கேள்வி கேட்டு துளைக்கும் விஷாலின் அந்தக் கோப நடிப்பு ஓகே ரகம். மற்றபடி அவருடைய நடிப்பை செப்பனிட்டு வழங்க எந்த இயக்குநர் சிக்கப் போகிறாரோ தெரியவில்லை.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப் படத்தில்தான் அதிகமாக நடித்திருக்கிறார். அதற்கான திரைக்கதையும், இடமும் இதில்தான் அவருக்குக் கிடைத்திருக்கிறது. கடைசியாக தான் அவசரப்பட்டுவிட்டதை ஒத்துக் கொள்ளும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார்.

ஒரு நாயகனுக்குரிய அறிமுகத்துடன் திரையில் தோன்றும் ஷ்ரத்தாவுக்கு அந்த பந்தா ஸ்டைல் ஒத்துவரவில்லை. போலீஸ் டிரெஸ்ஸும் பிட் ஆக இல்லை. கொஞ்சம் இதில் முனைப்பு காட்டியிருக்கலாம்.

வில்லியாக ரெஜினா கேஸண்ட்ரா. திரைக்கதையை நம்ப முடியவில்லை. இடைவேளைக்குப் பின்பு ‘லீலா’ என்ற இவருடன் விஷால் ஆடும் சதுரங்க ஆட்டம்தான் திரைக்கதை. அந்தத் திரைக்கதைக்கேற்ற நடிப்பை ரெஜினா காட்டியிருக்கிறார்.

அவருடைய ஸ்டைஷிலான நடை, உடை, பாவனைகள்.. வசன உச்சரிப்புகள் எல்லாம் நாயகனுக்குரியவை. இவருக்கு வைத்திருக்கும் பிளாஷ்பேக் காட்சி மூலமாக இவருடைய வளர்ப்பு சரியில்லை என்பதை அழுத்தமாக இயக்குநர் சொல்லிவிட்டதால் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மீது எந்தத் தவறும் இல்லை. நன்று.

திருடர்களாக நடித்திருக்கும் மகாவும், ரவியும் சாலப் பொருத்தம். அவர்களது தோற்றமே அவர்களது குணத்தைக் காட்டுகிறது. அதே நேரம் கண்மூடித்தனமாக தங்களது அக்காவை நம்பும் அவர்களது குணத்திற்கு அவர்களின் சின்ன வயது பிளாஷ்பேக்கே நம்பகத்தன்மையைக் கொடுத்துவிடுகிறது.

அக்காவை நம்பி அவர்கள் பேசும் வசனங்களும், பாராட்டிப் பேசும் வசனங்களும், போதை மருந்தை கொடுத்து பழக்கி வைத்திருப்பதால் தன் பெயரை சொல்லவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்காமல் அவர்கள் பலியாவது வளர்ப்பின் கொடூரம். அந்தக் காட்சியில் மகாவும், ரவியும் தீயாய் சண்டையிட்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியை வடிவமைத்த சண்டை இயக்குநருக்கு பெரும் பாராட்டுக்கள்.

ரோபோ சங்கர் இடையிடையே கவுண்ட்டர் டயலாக் பேசுவதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறார். தேவையில்லாதது. சீரியஸான நேரத்தில் ஜோக் அடிப்பதால் கோபம்தான் வருகிறது.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு குறையில்லாமல் இருக்கிறது. படத்தின் பட்ஜெட்டுக்கும், கதைக்கும் தகுந்தாற்போல் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளின் ஷாட்டுகளை வைத்திருக்கும்விதமும், அதற்கான ஒளிப்பதிவும்தான் அந்தக் காட்சிகளை மனதில் நிலை நிறுத்துகிறது. நாயகிகளை அழகாககத்தான் காட்டியிருக்கிறார். அதிலும் ஷ்ரத்தா கொஞ்சம் கூடுதலாக ஜொலிக்கிறார்.

படத்தின் எடிட்டர் கொஞ்சம் மனம் வைத்து 3 காட்சிகளை நீக்கியிருந்தால் தேவையில்லாத ஆணிகள் களையப்பட்ட திருப்தி அவருக்குக் கிடைத்திருக்கும். விஷால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துப் பேசும் காட்சிகளை மொத்தமாக நீக்கியிருக்க வேண்டும். இதனால் இந்தப் படத்துக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

பின்னணி இசையில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் யுவன். ஒரேயொரு பாடல்தான். பிளாஷ்பேக்கில் வரும் அந்தப் பாடல் ஆராரோ.. ஆரிராரோ போன்று இருந்தது  மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

முதல் பாதியைவிடவும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் தேக்க நிலை. இதனை சரி செய்திருக்கலாம்.

விஷாலின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் ராணுவத்தின் கேப்டன் என்பதற்குப் பதிலாக காவல் துறையிலேயே இவரும் ஒரு அஸிஸ்டெண்ட் கமிஷனர். சஸ்பெண்ட்டில் இருக்கிறார். அல்லது லீவில் இருக்கிறார். வேறு ஊரில் இருக்கிறார். சைபர் திருட்டுக்களில் வல்லவர் என்பதால் அவரை இங்கே கொண்டு வருகிறோம் என்று சொல்லியாவது வைத்திருக்கலாம்.

தேவையில்லாமல் ராணுவத்தில் கேப்டன் என்று சொன்னால்.. இவர் எப்படி போலீஸுக்குத் தலைமை தாங்க முடியும்..? இவரை எப்படி உள்ளே விட்டார்கள்..? மற்ற போலீஸார் எப்படி இதனை ஒத்துக் கொள்வார்கள்..? என்று இத்தனை லாஜிக் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் இயக்குநரே..!

மற்றவர்களைவிடவும் தனக்குத்தான் ‘ஐ க்யூ’ அதிகம் என்பது போலவே விஷால் படம் நெடுகிலும் பேசிக் கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். துப்புக்கள் கிடைப்பதை போலீஸ் இல்லாமல் வேறொருவர் மூலமாகக் கிடைக்க வைப்பதுதான் இது போன்ற கிரைம் சப்ஜெக்ட்டுகளின் அடிப்படை குணம். இதனை இயக்குநர் இந்தப் படத்தில் மீறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

எப்படியிருந்தாலும் இரண்டரை மணி நேர பொழுது போக்கிற்கு மிக, மிகப் பொருத்தமான கதை, திரைக்கதை, இயக்கத்தை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்தன்.

இந்தச் ‘சக்ரா’வை நிச்சயமாக பார்க்கலாம்..!

- Advertisement -

Read more

Local News