“சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதி உத்தரவை திரும்பப் பெற வேண்டும்…” என்று மத்திய அரசு, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் சென்ற ஆண்டு அக்டோபர் 15-ம் தேதியன்று திறக்கப்பட்டன. அப்போதே மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் “தியேட்டர்களில் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இப்போது தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பரவலாக குறைந்து வருவதாலும், மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் போட்ட பணத்தை எடுக்க முடியாது என்று நினைத்து திரையுலகத்தினர் பலரும் வற்புறுத்தி கேட்டதாலும், தமிழக அரசு “சினிமா தியேட்டர்களில் வரும் பொங்கல் நாள் முதல் 100 சதவிகித டிக்கெட்டுக்களை வழங்கலாம்” என்று சமீபத்தில் ஆணை பிறப்பித்தது.
ஆனால், “இந்த ஆணை வெளியிட்டது தவறானது.. சட்ட விரோதமானது.. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது…” என்று பல்வேறு வழிகளில் மத்திய அரசு கூறியுள்ளது.
இது பற்றி தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சண்முகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்…
“மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் டிசம்பர் 28-ம் தேதி வெளியிட்ட உத்தரவின்படி தற்போதுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் 2020 ஜனவரி 31-ம் தேதிவரையிலும் நீடிக்கப்படுவதாக சொல்லியிருந்தது.
இந்த ஆணையின்படி இந்தியா முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆனால், தமிழக அரசு சமீபத்தில் 100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்டப்படி செல்லாது.
“பேரிடர் மேலாண்மையின் கண்காணிப்பில் இருக்கும் காலங்களில் மத்திய அரசின் உள்துறையும், மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பும் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கடைப்பிடிப்பது மாநில அரசுகளின் கடமை…” என்று உச்சநீதிமன்றமும் சமீபத்தில் கூறியுள்ளது.
இதனால், மத்திய அரசின் உத்தரவை மீறி தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது. எனவே தமிழக அரசு, தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித டிக்கெட்டுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவினைத் திரும்பப் பெற வேண்டும்..” என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை தமிழக அரசு மீறி 100 சதவிகித டிக்கெட் விற்பனைக்கான உத்தரவினை திரும்பப் பெறாவிட்டால் நிச்சயமாக யாராவது நீதிமன்றத்திற்குச் செல்வார்கள். அப்போது நிச்சயமாக இதற்கான தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.
எனவே, தமிழக அரசே இந்த உத்தரவை வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு என்னவாகும் என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு குழப்பத்திற்குள் தமிழ்த் திரையுலகம் வந்துள்ளது..!