அனைத்து இந்திய மொழிகளிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கும் பிரபல திரைப்பட பின்னணி பாடகியான பி.சுசிலா தன் வாழ்க்கைக் கதையைப் படமாக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இது குறித்து அவர் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூறியுள்ளாராம்.
நேற்று தனது டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இதைத் தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய திரையுலகின் தலை சிறந்த பாடகியான பி.சுசீலாவிடம் பேசினேன். அப்போது எனது ‘99 SONGS’ படத்தை ஓ.டி.டியில் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர் படத்தை பார்த்து விட்டு என்னை அழைத்து, ‘படம் நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை கதையையும் இதுபோல படமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா..?’ என்று கேட்டார்.
ஏழு தலைமுறைகளாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய சுசீலாம்மா எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவர் எனது படத்தைப் பாராட்டியதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி..” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.