சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையின் கடைசியில் ‘பாரதிராஜா மருத்துவமனை’ அமைந்துள்ளது. சென்னையில் மிகவும் பேமஸான இந்த மருத்துவமனை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு சொந்தமானது என்றே இன்றுவரையிலும் பலரும் நினைத்து வருகிறார்கள்.
ஆனால், “அது தவறு. அந்த மருத்துவமனையில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அது என்னுடைய நண்பரான டாக்டர் சி.நடேசனுக்குச் சொந்தமானது..” என்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
இது குறித்து ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தனது யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “என்னுடன் ஆரம்பக் காலத்தில் இருந்தே தயாரிப்புப் பணியைக் கவனித்து வந்தவர் வடுகநாதன். இவருடன் ஜெயக்குமார் என்பவரும் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து வந்தார்.
இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்திருந்தேன். அப்படி செய்த படம்தான் ‘கடலோரக் கவிதைகள்’. உண்மையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அந்த இருவர்தான்.
படம் முடிந்து, வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகு என்னுடைய கையில் 24 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது. இந்தப் பணத்தைத் தயாரிப்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்க நினைத்தபோதுதான் என் நினைவுக்கு வந்தார் டாக்டர் சி.நடேசன்.
இவர், என் ஊருக்குப் பக்கத்து ஊரான தேனி, டொம்புச்சேரியைச் சேர்ந்தவர். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்டவர். ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்தபோது என்னைத் தேடி வந்து சந்தித்து, “எனக்காக நீங்கள் ஒரு படம் இயக்கித் தர வேண்டும்” என்று கேட்டு ஒரு லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்திருந்தார்.
அதன் பின்பு அவர் சென்னைக்கு வந்து மேற்கு மாம்பலத்தில் சின்னதாக ஆஸ்பத்திரி வைத்திருந்தார். என்னுடைய குடும்ப டாக்டராகவும் மாறிப் போனார். அவருடைய தங்கையின் திருமணத்திற்கு அவருக்குக் கொஞ்சம் பணமுடை ஏற்பட்டபோது நான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையோடு இன்னும் ஒரு லட்சம் ரூபாயைச் சேர்த்து 2 லட்சம் ரூபாயாக அவருக்குத் திருப்பிக் கொடுத்தேன்.
இந்த நேரத்தில்தான் “ஏன் நடேசனையும் இந்தக் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ஒரு பார்ட்னராகச் சேர்க்கக் கூடாது…?” என்ற எண்ணம் எனக்குள் வந்தது. உடனேயே அவரை சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். அவர் முதலில் தயங்கினார். ஆனால் நான் விடாப்பிடியாக “நீங்களும் இந்தப் படத்துல ஒரு பார்ட்னர்தான்…” என்று சொல்லி கையெழுத்து வாங்கினேன்.
அதன் பின்பு வடுகநாதனையும், ஜெயக்குமாரையும் அழைத்து அவர்களிடத்தில் இதைச் சொன்னேன். அவர்களோ “நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கு சரிதான் ஸார்…” என்று சொல்லிவிட்டார்கள். உடனேயே அந்தப் படத்தின் மூலம் லாபமாகக் கிடைத்த 24 லட்சம் ரூபாயை 3 பங்காகப் பிரித்து அந்த மூவருக்கும் பிரித்துக் கொடுத்தேன்.
அந்தப் பணத்தை வைத்து டாக்டர் நடேசன் மேற்கு மாம்பலத்தில் ஒரு சின்ன இடத்தை வாங்கி அதில் மருத்துவமனையைக் கட்டினார். காலப்போக்கில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் என்னுடைய பெயரிலேயே மிகப் பெரிய மருத்துவமனையைக் கட்டிவிட்டார்.
இப்போதுவரையிலும் அந்த மருத்துவமனை என்னுடையது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் துளியும் உண்மையில்லை. அந்த மருத்துவமனை முழுக்க, முழுக்க டாக்டர் சி.நடேசனுக்கு மட்டுமே சொந்தமானது..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.