Friday, November 22, 2024

குரு கே.பாக்யராஜுக்கு கால் பிடித்துவிட்ட சிஷ்யன் பாண்டியராஜன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிபவர்களெல்லாம் 9 டூ 6 அலுவலக வேலையைப் போல ஒரு வேலையைச் செய்துவிட்டு போய்விடுபவர்களல்ல..!

ஒரு இயக்குநரிடம் பணியாற்றித் தொழில் கற்றுக் கொள்வது என்பது பழங்காலத்திய குரு குலம் போலத்தான். அந்த இயக்குநரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும் அறிந்து கொண்டு சமயோசித புத்தியுடன் அவர்களுடன் பழகி வந்தால்தான் அதே குருவிடம் நீண்ட நாள்கள் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்ள முடியும்.

குரு பக்தி என்பது ஆளுக்கு ஆளு மாறுபடும். அது, குருக்களைப் பொறுத்தும், சிஷ்யர்களைப் பொறுத்தும் மாறுபடும்.

இன்றுவரையிலும் இயக்குநர் கே.பாக்யராஜ் தனது குருவான பாரதிராஜாவின் பெயரைக்கூட வெளியில் எங்கேயும் உச்சரித்ததில்லை. “எங்க டைரக்டர்…” என்று மட்டுமே சொல்வார். அதே போலத்தான் பாண்டியராஜனும் அவரது குருவான கே.பாக்யராஜை “எங்க ஸார்…” என்று சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்.

இது மட்டுமல்ல. அவர் கே.பாக்யராஜிடம் எவ்வளவு குரு பக்தியுடன் இருந்தார் என்பதை இப்போது அவரே சொல்லியிருக்கிறார்.

“டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது இருக்கின்ற அஸிஸ்டெண்ட்களிலேயே நான்தான் டைரக்டர் ஸார்கிட்ட அதிகமா திட்டு வாங்குவேன். தேவையே இ்ல்லைன்னாலும் யாரையாவது திட்டுறதுன்னாகூட அவங்களைத் திட்டுறதுக்குப் பதிலா, என்னைத்தான் திட்டுவார். இதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கிறதில்லை.

நான் வந்தது அவரை நம்பித்தான். சினிமா தொழிலை கத்துக்கணும்னுதான். கத்துக்குவோம். அதுக்காக அவர் என்ன சொன்னால் என்ன என்ற மாதிரிதான் இருந்தேன்.

அந்தப் படத்தோட ஷூட்டிங்ல நான்தான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வேன். எல்லாருக்குமே என்னை ரொம்பவும் பிடிக்கும்.

ஒரு நாள் திடீர்ன்னு அந்தப் படத்தோட புரொடியூஸர் என்னைத் தனியாக் கூப்பிட்டு “நீ நம்ம கம்பெனிக்கு அடுத்தப் படம் செய்றியாப்பா..?” என்றார். எனக்குத் திக்குன்னு ஆகியிருச்சு. ஏன்னா.. நான் அப்போவெல்லாம் ரொம்ப சின்னப் பையனா.. பார்க்கவே டைரக்டர்ன்னுகூட சொல்ல முடியாத அளவுக்கான தோற்றத்துல இருப்பேன்.

அந்தத் தயாரிப்பாளர்கிட்ட என்ன சொல்றதுன்னே தெரியாமல்.. “பண்றேன் ஸார்.. பண்ணலாம் ஸார்”ன்னு சொல்லி இழுத்துச் சொல்லிட்டேன். அப்புறம் மனசுக்குள்ள ஒரு சின்ன பயம் வேற வந்திருச்சு.

நம்ம டைரக்டர் இந்தத் தயாரிப்பாளருக்கு இப்போ படம் பண்ணிக்கிட்டிருக்காரு. ஒருவேளை இதே கம்பெனிக்கு அவரே அடுத்தப் படத்தையும் செய்ற மூட்ல இருந்தாருன்னா.. இடைல நாம புகுந்தால் அது நல்லாயிருக்காதேன்னு பயந்தேன்.

ஒரு நாள் ராத்திரி ஷூட்டிங் முடிஞ்சு டைரக்டர் ரூம்ல அசதியா படுத்திருந்தாரு. நான் பக்கத்துல உக்காந்து அவருக்கு கால் பிடிச்சு விட்டுட்டிருந்தேன். அப்போ இதை அவர்கிட்ட சொல்லி பெர்மிஷன் கேக்கலாமேன்னு தோணுச்சு.

உடனே மெதுவா அவர்கிட்ட, “இதே கம்பெனிக்கு நீங்க எப்போ ஸார் அடுத்தப் படம் பண்ணுவீங்க..?” என்று கேட்டேன்.  அவர் ரொம்ப அலுப்போட.. “முதல்ல இந்தப் படம் முடியட்டும்டா.. அப்புறம் பார்க்கலாம்.. எப்படியும் 4, 5 வருஷமாயிரும்..” என்றார்.

உடனேயே நான் “ஸார் இந்தத் தயாரிப்பாளர் என்கிட்ட ‘அடுத்தப் படத்தை நீ டைரக்டர் பண்றியா’ன்னு கேட்டார் ஸார்..” என்றேன்.

உடனே டக்குன்னு டைரக்டர் எழுந்து உட்கார்ந்து, “டேய் நல்ல விஷயம்டா.. விட்ராத.. நீயும் எத்தனை நாளைக்குத்தான் என்கூட இருப்ப.? தனியா வாய்ப்பு வந்தால் அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கணும்.. நீயே அடுத்தப் படத்தைப் பண்ணு.. நாளைக்கே ‘நான் ரெடி ஸார்’ன்னு தயாரிப்பாளர்கிட்ட சொல்லிரு..” என்றார்.

அப்படியே அவரோட கால்ல விழுந்து கும்பிட்டேன். அவரோட ஆசீர்வாதத்துல இருந்து ஆரம்பிச்ச படம்தான் என்னுடைய முதல் படமான ‘கன்னி ராசி’..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.

- Advertisement -

Read more

Local News