தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர்.சி. குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையிலான படங்களை தருபவர் சுந்தர்.சி. இவரது எந்தப் படத்தைப் பார்த்தாலும், மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும்.
இவர் இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை-2’ போன்ற பேய் படங்கள் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது.
‘அரண்மனை’ படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது ‘அரண்மனை-3’ படமும் தயாரிக்கப்பட்டு ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.
இந்த ‘அரண்மனை-3’ படம் முதல் இரண்டு பாகங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவ்வருடம் நம்மை விட்டுப் பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்கம் – சுந்தர்.சி, ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், இசை – C.சத்யா, படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – குருராஜ், சண்டை இயக்கம் – பீட்டர் ஹெய்ன், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிறுவனம் – ஆவ்னி சினிமேக்ஸ், தயாரிப்பாளர் – குஷ்பு.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்தக் கிளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே 6 மாதங்கள் நடைபெற்றது.
முந்தைய இரு படங்களைவிட, பிரம்மாண்டமான பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.