இயக்குநர் சிவாவின் படங்களில் அதீதமாக குடும்ப சென்டிமெண்ட்டுகள்தான் இருக்கும். அவருடைய ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் இதே நிலைமைதான். ‘விஸ்வாசம்’ படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் சென்டிமெண்ட்டுதான் அந்தப் படத்தையே தூக்கி நிறுத்தியது.
இயக்குநர் சிவா அதே பார்முலாவில் தனது பழைய படங்களின் கதையையும், திரைக்கதையும் கலந்து அதில் கிச்சடி செய்து உருவாக்கியிருக்கும் படம்தான் இந்த ‘அண்ணாத்த’.
முன்னதில் ‘அப்பா-மகள்’ என்றால் இதில் ‘அண்ணன்-தங்கச்சி’. ‘முள்ளும் மலரும்’, ‘பாட்சா’வை போல அந்த சென்டிமெண்ட்டை ஸ்ட்ராங்காக பதிய வைப்பதற்காக மற்ற பகுதிகளில் கோட்டைவிட்டுவிட்டார் இயக்குநர் சிவா.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ‘சூரக்கோட்டை’ என்ற கிராமத்தில் வசிக்கும் காளையன்தான் நாயகன் ரஜினி. இவரே ஊராட்சித் தலைவர். அநியாயத்திற்கு நல்லவர். மக்களுக்கு நல்லது செய்ய வழக்கம்போல துடிப்பவர். கெடுதல் செய்பவர்களை தூக்கிப் போட்டு மிதிப்பவர்.
இந்த ‘மிதிக்கும்’ பணியில் அவ்வப்போது இவரிடம் சிக்கி அல்லல்படுபவர் இவரது எதிரியான பிரகாஷ்ராஜ். இவர்கள் இருவருக்குமான மோதலினால் விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. ரஜினிக்கு வக்கீலாக அறிமுகமாகிறார் நயன்தாரா. அப்போது இருவருக்குள்ளும் பற்றிக் கொள்கிறது காதல் என்னும் நெருப்பு.
இன்னொரு பக்கம் காளையனுக்கு ஒரு தங்கச்சி. ‘தங்க மீனாட்சி’ என்ற அந்தத் தங்கத்தின் மீது நிரம்ப பாசம் வைத்திருக்கிறார் அண்ணன் ரஜினி. தங்கச்சிக்கு ஒரு கால்கட்டு போட்டுவிட நினைத்து அவருக்குத் தன்னுடைய எதிரியான பிரகாஷ்ராஜின் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார் ரஜினி.
திருமணத்திற்கு முதல் நாள் கீர்த்தி சுரேஷ் தனது காதலருடன் கொல்கத்தாவிற்கு எஸ்கேப்பாகுகிறார். அதிர்ச்சியாகிறார் ரஜினி. கொல்கத்தா சென்ற கீர்த்தி சுரேஷுக்கு அங்கேயும் ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது.
கீர்த்தியின் புருஷனின் சொத்துக்களை அபகரித்து அவரை சிறையிலும் அடைக்கிறார் இன்னொரு வில்லன். இப்போது தங்கச்சியைப் பார்ப்பதற்காக கொல்கத்தா வரும் அண்ணன் ரஜினி, தங்கச்சியின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்றெண்ணியவர், தங்கச்சி மற்றும் தங்கச்சி புருஷன் வாழ்க்கையில் விளையாடியவர்களை அவர்களுக்கே தெரியாமல் தான் பந்தாடுகிறார்.
இந்தப் பந்தாட்டம் எங்கே போய் முடிகிறது என்பதுதான் இந்த ‘அண்ணாத்த’ படத்தின் சுருக்கமான திரைக்கதை.
ரஜினி ‘காலா’, ‘கபாலி’ படங்களைவிடவும் இந்தப் படத்தில் மிகவும் இளமைத் துடிப்புடன் நடித்திருக்கிறார். உற்சாகத்துடன் வலம் வருகிறார். ரஜினியின் ஸ்க்ரீன் ஸ்பேஸ் அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.
காமெடி காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் 1990-களின் ரஜினியைப் பார்க்க முடிகிறது. தங்கை தங்க மீனாட்சியை ‘தங்கம்’, ‘தங்கம்’ என்று காட்சிக்கு காட்சி கொஞ்சுவதும், கெஞ்சுவதும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் தங்கச்சியா என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் அதை நம்மால் முழுமையாக ரசிக்கத்தான் முடியவில்லை.
நயன்தாராவின் அழகை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். கலர் கரெக்சனிலும், அவருடைய உடையலங்காரத்திலும் அக்கறை காட்டியவர்கள்.. முகத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள். வயதானது தெளிவாகத் தெரிகிறது.
நயன்தாராவைவிடவும் ‘மாமோய்’, ‘மாமோய்’ என்று ரஜினியை கொஞ்சிக் கொண்டிருக்கும் குஷ்பூவும், ‘அத்தான்’ என வழியும் மீனாவும் அழகாக இருக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
ரஜினியை ‘காள்ஸ்’ என்று நயன்ஸ் கொஞ்சுவதும், பதிலுக்கு அவரை ‘பட்டு’, ‘பட்டு’ என்று ரஜினி கொஞ்சுவதும் கொஞ்சம் சிலிர்ப்பையும், சிரிப்பையும் வரவழைத்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் போர் அடித்துவிட்டது.
துவக்கத்தில் ரஜினியும், நயன்தாராவும் இடம் பெறும் காட்சிகள் ஈர்ப்பாகவும், ரசிக்கும்படியும் இருந்தாலும்,. நயன்தாரா திடீரென்று காணாமல் போய் பின்னர் மீண்டு வருவதால் மொத்தமாக இந்தப் படத்திற்குள் அவர் எதுக்கு என்று கேள்விதான் எழுகிறது.
கீர்த்தி சுரேஷ் மிகவும் மெலிந்த உடலுடன் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் படுத்து எழுந்து வந்தவர்போல் இருப்பதால் சகிக்க முடியவில்லை. இந்த வயசுக்கு கொஞ்சம் பூசுனாப்புல இருந்தாத்தான நல்லாயிருக்கும்..? ஆனால் இடைவேளைக்குப் பின்பு கீர்த்தியை அழு, அழுவென்று அழுக வைத்து படத்திற்கு சிம்பதி கிரியேட் செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
சூரி, சதீஷ், சத்யன் என்று மூன்று நடிகர்களை வைத்து காமெடியை வரவழைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சிவா. இதில் சத்தியனின் காமெடி மட்டும் சில இடங்களில் ஒர்க் அவுட்டாகி சிரிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஏகப்பட்ட லூட்டிகளை அடிக்கிறார். சில காமெடிகள் நன்றாக இருந்தாலும் சில நகைச்சுவை காட்சிகள் மொக்கையாத்தான் இருக்கு.
‘பச்சக்கிளி’ என்று சூரியை ஒவ்வொரு முறையும் ரஜினி அழைக்கும்போது ‘Definetly’, ‘Musically’, ’Absolutely’, ‘immediately’ என்று பல ‘லீ’ வகை ஆங்கில வார்த்தைகளை பேசியே கொல்கிறார் சூரி.
இவர்கள் எல்லாம் பத்தாது என்று அவ்வப்போது ‘மாமோய்’, ‘மாமோய்’ என்று கூப்பிடும் குஷ்பூ, ‘அத்தான்’, ‘அத்தான்’ என்று கூப்பிடும் மீனாவும் இன்னொரு பக்கம் வேறு மாதிரியாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
குஷ்பூவுக்கும், மீனாவுக்கும் இடையிடையே வந்து போகும் சில காட்சிகளே இருக்கின்றன. இருந்தாலும் இவர்கள் இந்த வயதிலும் கல்யாணத்திற்காகக் காத்திருப்பது போன்ற காட்சியெல்லாம் ரொம்ப டூ மச்சால்லா இருக்கு..?
டி.இமானின் இசையில் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் மறைந்த எஸ்.பி.பி.யின் மந்திரக் குரலில் மயக்குகிறது. எல்லா பாடல்களுமே கதையோடு தொடர்புடைய பாடல்களாகவும். காட்சிகளாகவும் இருப்பதினால் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.
‘வா சாமி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு மிக, மிக பிடித்திருக்கிறது. ‘சார சார காத்தே’ பாடலை படமாக்கப்பட்டவிதம் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் தீம் மியூஸிக்கில் கலவரப்படுத்தியிருக்கிறார் டி.இமான்.
ஒளிப்பதிவின் சிறப்பு மதுரை மற்றும் கொல்கத்தாவாகக் காட்டப்பட்ட காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தெரிகிறது. கலை இயக்குநருக்கும் ஒரு மிகப் பெரிய பாராட்டு. இருப்பிடங்களை வடிவமைப்பது என்பது சாமான்யப்பட்ட வேலையல்ல. அதை அழகாகச் செய்திருக்கிறார் கலை இயக்குநர்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளுக்கேற்ற உடைகளை வடிவமைப்பு செய்தவர்களையம் பாராட்டியே ஆக வேண்டும். பாடல் காட்சிகளில் கலர், கலராக இருப்பதைவிடவும், கவரக் கூடிய வகையில் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.
சண்டை காட்சிகளில் 70 வயதுடைய ஹீரோ நடிப்பதை மனதில் வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்புராயன். சிவாவின் படங்களில் சண்டை காட்சிகளை அதிக ஸ்டைலிஷாகவும் இருக்கும். இதிலும் அப்படியே.. ரஜினியின் ஸ்டைல் மேனரிசத்தை விட்டுவிடாமல் சேர்த்து எடுத்திருக்கிறார்கள்.
படத் தொகுப்பாளரின் கத்திரி எங்கே என்ன செய்வது என்பது தெரியாமல் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருந்தும் படத்தில் பழைய வாசனை அடிப்பதை தடுக்க முடியவில்லை.
அண்ணன்-தங்கை பாசப் போராட்டத்தைக் கதைக் களமாக்கிய இயக்குநர் திரைக்கதையில் புதுமை செய்யாமல் அடுத்தக் காட்சி என்னவென்பதை நாமே ஊகித்துவிடும் அளவுக்கு திரைக்கதை எழுதியிருப்பதுதான் சோகமான விஷயம்.
படம் முதல் ஒரு மணி நேரத்தில் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது. பிரகாஷ்ராஜூடனான சண்டைகள், குஷ்பூ, மீனாவின் கல்யாண கலாட்டா, தங்கச்சி மீதான பாசக் காட்சிகள், நயன்தாராவுடனான திடீர் காதல் என்று கதை பிட்டு பிட்டாக ஓடியதால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.
படத்தின் வில்லன்களின் லிஸ்ட்டும் கூடிக் கொண்டே செல்வதும் அலுப்பைக் கூட்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜ் ஒரு வில்லன். கீர்த்தி சுரேஷின் கணவரிடமிருந்து சொத்தைப் பறிக்கும் வில்லனாக அபிமன்யூ சிங், இதற்குப் பிறகு ஒரு வில்லனாக ஜெகபதிபாபு. அபிமன்யூ சிங்கிற்கும், ஜெகபதிபாபுவுக்கும் இடையிலான மோதல் என்று கதை திரித்து, திரித்துப் போய்க் கொண்டேயிருக்கிறது.
கிளைமாக்ஸில் வில்லனின் ஆட்களை காளையன் அடித்து நொறுக்கிப் போட்டுவிட, அவர்களிடத்தில் “யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா” என்று கீர்த்தி சுரேஷ் வரிசையாகக் கேள்வி கேட்கும் காட்சி இருக்கே.. ரொம்பவே ஓவர் மிஸ்டர் இயக்குநர்..!
ரஜினி தன் குடும்பத்துடன் விஜயகாந்த் மற்றும் வடிவேலு சேர்ந்து நடித்த காமெடி காட்சியை பார்ப்பதாக ஒரு காட்சி. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் தேவையில்லாத ஆணிகளாகவே தெரிகிறது. ரஜினி பேசும் பல பஞ்ச் வசனங்கள் சுத்தமாக எடுபடவில்லை. ஓவர் டோஸாக அமைந்திருக்கின்றன.
அண்ணன்-தங்கச்சி பாசம் காட்சியமைப்பில்தான் இருக்கிறதே தவிர, ரஜினி-கீர்த்தி சுரேஷ் காம்பினேஷனில் எடுபடவே இல்லை. ரஜினி, கீர்த்தி சுரேஷூக்கு அண்ணன் என்ற விஷயம் ரசிகர்கள் மனதில் ஒட்டவேயில்லை என்பதுதான் உண்மை.
இடைவேளைக்குப் பின்பு கீர்த்தி சுரேஷுக்கே தெரியாமல் கொல்கத்தாவில் தங்கியிருந்து தங்கையின் வாழ்க்கையை பாதுகாக்க ரஜினி செய்யும் செயல்களும், சண்டைகளெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாக, துண்டு துண்டாகத்தான் தெரிகின்றன.
கதையிலும், திரைக்கதையிலும் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தால் இந்த ‘அண்ணாத்த’ மக்களை அண்ணாந்து பார்க்க வைத்திருப்பார்.
RATINGS : 3.5 / 5