‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதியன்று தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்தது.
திரையரங்குகளில் வெகு விரைவாக 200 கோடி வசூலைத் தாண்டியதாக பல்வேறு செய்திகள் தெரிவித்தன. இப்போதும் பல திரையரங்குகளில் ‘அண்ணாத்த’ படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ‘அண்ணாத்த’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காண்பிக்கப்படுகிறது.
இந்தச் செய்தி தமிழ்த் திரையுலகத்தினர் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில், பொதுவாக ஒரு படம் திரையரங்கில் வெளியானால் அது வெளியாகி 4 வாரங்கள் கழித்தே ஓடிடிக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் விதிமுறை.
இந்த விதிமுறையை ஒத்துக் கொண்டு கடிதம் கொடுத்தால் மட்டுமே அந்தப் படத்தினை திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதேபோல் ‘அண்ணாத்த’ படத்திற்கும் இது மாதிரியான கடிதத்தைப் பெற்றுக் கொண்டுதான் திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருப்பார்கள்.
ஆனால் அந்த விதிமுறைக்கு மாறாக வெறும் 21 நாளிலேயே ‘அண்ணாத்த’ படத்தை ஓடிடியில் வெளியிட்டிருப்பதை பார்த்து திரையுலகத்தினர் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் படம், ரஜினி படம் என்றால் ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று திரையுலகத்திற்குள் இன்று காலையில் இருந்தே பலவித குமுறல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அதே சமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ‘சன் நெக்ஸ்ட்’ என்ற ஓடிடி தளத்தை நடத்தி வருகிறது. ஆனால் அதில் ‘அண்ணாத்த’ படத்தை வெளியிடாமல் ‘நெட்பிளிக்ஸ்’ தளத்திற்கு ஏன் கொடுத்தார்கள் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இது பற்றி விசாரித்தபோது ‘அண்ணாத்த’ படத்திற்கு தற்போதுவரையிலும் கிடைத்த லாபமாக, போட்ட முதலீட்டில் இருந்து அதிகப்பட்சமாக சில கோடிகள்தான் வந்திருக்கிறதாம்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பங்கு மார்க்கெட்டில் இருக்கும் நிறுவனம் என்பதால் வருடா வருடம் அதிக லாபத்தைக் காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதனால்தான் தன்னுடைய சொந்த நிறுவனத்தைவிட்டுவிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ கொடுத்த 75 கோடியை வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தையும் ‘அண்ணாத்த’ படத்தின் லாபத் தொகையில் சேர்த்திருக்கிறது ‘சன் பிக்சர்ஸ்’ என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.