நக்கலைட்ஸ் டீம் தங்களின் வழக்கமான பாணியில் இறக்கியிருக்கும் வெப் சீரிஸ் ‘அம்முச்சி-2’.
கொங்கு மாவட்டத்தில் இருக்கும் கோடாங்கிபாளையம் என்ற ஊர்தான் இந்த வெப் சீரீஸின் கதைக் களம். அந்த ஊரில் உள்ள நாயகி மித்ராவிற்கு கல்லூரிக்குப் சென்று பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்பது கனவு. அந்தக் கனவுக்கு அவரது பட்டிக்காட்டு அப்பா தடை போடுகிறார்.
அதோடு மித்ராவிற்கு ஒரு டெரர் மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்கிறார். அதனால் மித்ரா மனைமுடைந்து தன் காதலரான அருணிடம் சொல்கிறார்.
உடனே அருண் தன் ஸ்ட்ரிக்டான அம்மாவை ஏமாற்றிவிட்டு கோடாங்கி பாளையம் வருகிறார். அங்கு அவரது மாமா வீட்டில் தங்குகிறார். மாமா மகனான சசி மற்றும் அவரது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு மித்ரா திருமணத்தை நிறுத்தி, அவரை கல்லூரிக்கு அனுப்ப என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த ‘அம்முச்சி-2’ வெப் சீரிஸின் கதை.
இந்த வெப் சீரிஸில் நேட்டிவிட்டி கொடி கட்டிப் பறக்கிறது. ஒரு கதை நடக்கும் நிலப்பரப்பிற்குள் நம்மை அழைத்துச் செல்லும் லாவகம் இயக்குநருக்கு வாய்த்து விட்டால் அந்தப் படைப்பு கவனிக்கப்படும் படைப்பாக மாறிவிடும். அந்த வகையில் இந்த சீரிஸின் இயக்குநர் கோவை மாவட்டத்திற்குள் அழைத்துச் சென்று விடுகிறார்.
நாயகன் அருண் மிக இயல்பாக ஈர்க்கிறார். முதலில் சில இடங்களில் தடுமாறினாலும் கதையில் பாதியை கடந்த பின் நமக்குள் கலந்து விடுகிறார்.
நாயகி மித்ராவின் நடிப்பில் துளியும் ஓவர் ஆக்டிங் தெரியவில்லை. ஏன் என்றால் கொஞ்சம் பிசகினாலும் ஓவர் ஆக்டிங்காக மாறிவிடக் கூடிய கேரக்டர் அவருக்கு. ஆனாலும் சிறப்பாகச் செய்துள்ளார்.
சின்னமணி பாட்டி கோவை ஸ்லாங்கில் அதகளம் செய்திருக்கிறார். “வைறு பசிக்காடா கண்ணு. செத்தம் இருடா, பஞ்சாட்டம் இட்லி சுட்டுத் தாரேன் ராசா” என்று கொஞ்சி கொஞ்சிப் பேசியே வஞ்சம் வைக்கும் பாட்டியின் நடிப்பு சூப்பர். இந்தப் பாட்டி சின்னமணியே ஒரு கட்டத்தில் அருணுக்கு எதிராக மாறும் ட்விஸ்ட் ஒன்றும் இந்தக் கதையில் இருக்கிறது.
சசியின் நடிப்பிலும் இயல்பு மாறவில்லை. கோடாங்கி பாளையம் ஆள் போலவே அசத்தி இருக்கிறார். சின்னமணி பாட்டியின் மகன் கேரக்டர் அதகளம் செய்திருக்கிறார். டெரர் மாப்பிள்ளையாக வருபவரும் நிஜமாகவே மிரட்டுகிறார்.
மேக்கிங்கில் சில இடங்களில் பட்ஜெட் வறட்சி தெரிந்தாலும், பெரிதாக உறுத்தவில்லை.
இசை அமைப்பாளர் இந்த சீரிஸுக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து கொடுத்துள்ளார். கதையின் மெயின் மேட்டரான போட்டிகள் நடக்கும் காட்சிகளில் இசை அமைப்பாளர் அதிக கவனம் கொடுத்து இசைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் செய்திருக்கும் வேலையும் வரவேற்க கூடியதே. கூடுமானவரையில் சின்ன பட்ஜெட் என்ற தோற்றத்தை மறைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சீரிஸின் நோக்கம் தெளிவாக இருப்பதால் ஒரு சில இடங்களில் வரும் தேக்கம் பெரிதாக நம்மை சலிப்படையச் செய்யவில்லை. இருப்பினும் வெப் சீரிஸுக்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ள பார்மட்ஸ் எதையும் இயக்குநர் கடைப்பிடிக்கவில்லை.
கிட்டத்திட்ட ஒரு நீளமான படம் என்பதாகவே இந்த சீரிஸ் ட்ராவல் ஆகிறது. ஆனாலும் ஒரு சில காமெடிகள் நம்மை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.
துளியும் ஆபாசம் இல்லாமல் மண் மணத்தோடு வெளியாகியுள்ள வெப் சீரிஸ் இது என்பதால் குடும்பத்தோடு ஆஹா ஓடிடியில் இந்த ‘அம்முச்சி-2’-வை பார்க்கலாம்.