தமிழில் ரீமேக் செய்யப்படும் அடுத்த மலையாளப் படமாக ‘அஞ்சாம் பத்தரா’ இடம் பிடித்திருக்கிறது.
ஏற்கெனவே ‘ஜோசப்’ படம் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் ஆகிறது. இது தவிர ‘த்ரிஷ்யம் 2’, ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘அய்யப்பனும் கோஷியும்’ ஆகிய படங்களும் மொழி மாற்றம் செய்யப்படும் வரிசையில் இருக்கின்றன. இந்த வரிசையில் இந்த ‘அஞ்சாம் பத்திரா’ படமும் இடம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தில் குஞ்சாகோ போபன், ஷரப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்தனர். படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியிருந்தார்.
போலீசை மட்டும் குறி வைத்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டு பிடிக்கிற கதைதான் இத்திரைப்படம்.
6 கோடியில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்தப் படம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படம் தற்போது தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், ஆஷிக் உஸ்மான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இந்த இரண்டு மொழி மாற்றுப் படங்களையும் இணைந்து தயாரிக்கவுள்ளன.
தமிழ் ரீமேக்கில் நாயகனாக அதர்வா நடிக்கவிருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.