நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடலை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம் பெற்ற ‘கையிலே ஆகாசம்’ பாடலைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

இது குறித்து அவர் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கு கண்ணீர் அருவி மாதிரி வழிந்தது.
தமிழில் சூர்யா படத்தில் ஒரு பாடல். சூர்யா தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார். படத்தோடு பார்க்கும்போது அந்த தருணம் மிகவும் கடினமானது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த பாடல் மிக அழகானது. இதயத்தை தொடுகிறது. இதோடு நான் முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுதினால் எனக்கு கண்ணீர் வரும்…” என்று எழுதியுள்ளார்.

மேலும் இந்த பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றமும் செய்து பகிர்ந்துள்ளார் அமிதாப்பச்சன்.
இதனைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “நன்றி சார். நமக்கு யார் உத்வேகமாக அளிக்கிறார்களோ, அவர்களே நம் பாடலைப் பற்றி குறிப்பிடும்பொழுது மகிழ்ச்சி…” என்று நன்றி தெரிவித்துள்ளார்.