Thursday, November 21, 2024

அக்கா குருவி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரானமஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய சர்வதேச விருதுகளையும் பெற்றது. இப்படத்தின் தமிழ் உருவாக்கம்தான் இந்த ‘அக்கா குருவி’ திரைப்படம்.

இப்படம் 1980-களில் நடக்கும் கதை என்பதால் அதற்காக பொருத்தமான இடமாக கொடைக்கானலுக்கு அருகிலுள்ள ‘பூம்பாறை’ என்று ஊரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இந்த ஊரில் உள்ள வீடுகள் அனைத்துமே 500 வருடங்கள் பழமையானவை என்பதால் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த ஊரில் வசிக்கும் செந்தில்குமார் தனது நோயாளியான மனைவியுடனும், பள்ளிக்குச் செல்லும் பையன், பெண் என்ற இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளைச் செய்து வரும் செந்தில்குமாருக்கு நிறைய கடன் பிரச்சினைகளும் உள்ளன.

இவருடைய பிள்ளைகளான பையனும், பெண்ணும் மிகுந்த பாசக்காரர்கள். அண்ணன், தங்கை பாசத்தில் திளைக்கிறார்கள். ஒரு நாள் தங்கையின் ஷூ பிய்ந்துவிடுகிறது. அதைத் தைப்பதற்காகக் கடைக்குக் கொண்டு செல்கிறான் அண்ணன்.

தைத்த பிறகு அந்த ஷூவுடன் வீட்டுக்கு வரும் வழியில் வீட்டுக்காக மளிகைப் பொருட்களை வாங்குகிறான் அண்ணன். இதற்காக ஷூவை வெளியில் பழக்கூடை அருகே வைத்துவிட்டுச் செல்கிறான்.

இந்த நேரத்தில் அங்கே வரும் குப்பை வண்டிக்காரன் மளிகைக் கடையில் இருந்த அந்த ஷூவை பழசு என்று நினைத்து எடு்த்துச் சென்று விடுகிறான். பின்பு, அண்ணன்காரன் தேடியும் அது கிடைக்காமல் போகிறது.

அண்ணன், தங்கை இருவரின் பள்ளியிலும் ஷூ அணியாமல் நுழைய முடியாது என்பதால் வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

அதன்படி தங்கைக்கு காலையில்தான் பள்ளி என்பதால் தங்கை காலையில் தான் பள்ளிக்குப் போகும்போது அண்ணனின் ஷூவைப் போட்டுச் செல்லலாம். மதியம் வேகம், வேகமாக வீடு திரும்பி அண்ணனிடம் ஷூவைக் கொடுக்க வேண்டும். அதன் பின்பு அண்ணன் அந்த ஷூவை அணிந்து கொண்டு தன் பள்ளிக்குச் செல்வான்.

இந்தத் திட்டத்தினால் அண்ணன்காரன் தினமும் பள்ளிக்குத் தாமதமாகப் போக வேண்டியிருக்கிறது. இதனால் அவனுக்குப் பள்ளியில் பிரச்சினை உண்டாகிறது. இன்னொரு பக்கம் தங்கையின் தொலைந்து போன ஷூ, திரும்பவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய ஷூ வாங்குவதற்காக உண்டியலை உடைக்கிறான் அண்ணன். ஆனால் இப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் அந்த ஊரில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தால் பரிசாக ஷூ கிடைக்கும் என்கிறார்கள். இதனால் இந்த மாரத்தானில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான் அண்ணன். இது முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘அக்கா குருவி’ படத்தின் சுவையான திரைக்கதை.

இந்தக் கதையுடனேயே இன்னொரு கிளைக் கதையாக ஒரு காதல் கதையும் தமிழுக்கென்றே இணைக்கப்பட்டிருக்கிறது. ‘இசைஞானி’ இளையராஜாவின் பாடல்களை மையமாக வைத்து நகரும் இந்தக் காதல் கதையில் பெண் உண்மையாக காதலிக்க.. ஆணோ அவளை அடைவதற்காக ‘காதல்’ என்ற பெயரில் அவள் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருகிறான். கடைசியில் இந்தக் காதல் என்னவானது என்பதும் இணைந்தே சொல்லப்பட்டுள்ளது.

அண்ணனாக நடித்த மாஹினும், தங்கையாக நடித்த டாவியாவும்தான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அவர்களைச் சுற்றித்தான் படமே நகர்கிறது என்பதால் தங்களது இயல்பான நடிப்பினால் படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக இருவரும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக ஓட வைத்திருப்பார் இயக்குநர். நடிப்பென்று பார்த்தாலும் இந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கும் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

தந்தையின் கோபத்தை உணர்ந்தும், குடும்பத்தின் சூழலை அறிந்தும் அப்பா, அம்மாவிடம் சொல்லாமலேயே தங்களது பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்ள நினைக்கும் பக்குவம் உள்ள அந்தக் குழந்தைகளின் செயல்களே ரசிக்கத்தக்கவை. அண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக இந்தப் படத்தையும் நாம் சொல்லலாம்.

அப்பா செந்தில்குமாரும், அம்மாவான தாராவும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் பையனுக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பதற்காக அவனையும் அழைத்துக் கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. ஏழைகளுக்குத்தான் எத்தனை சிரமங்கள்..?

காதலியாக நடித்தவர் கேமிராவுக்கேற்ற முகத்துடன் வலம் வருகிறார். இவருக்கான காதல் போர்ஷனில் இவர்களைக் கவனிக்க வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜாதான். பி.டி.மாஸ்டராக நடித்த நடிகரும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்.

மலை கிராமம் என்பதால் அதன் அழகை அங்குலம், அங்குலமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதிலும் முருகன் கோவில் திருவிழாவை பகல், இரவு என்ற இரண்டு பொழுதுகளிலும் மிக அழகாகப் பதிவு செய்து அதற்கேற்ற பாடலையும் அந்த இடத்தில் நிரப்பி ஒரு கட்டத்தில் படத்தையே பக்தி மயமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்களுமே கேட்கும் ரகம். ‘மாங்குயிலும், கிளியும்’ பாடலும், ‘முன்னே போ’ பாடலும் கதையுடன் ஒன்றிப் போக.. ‘பூம்பாறையில் வாழ்பவனே’ பாடல் மனதைத் தொட்டிருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் ‘இசைஞானி’யின் பின்னணி இசை. தங்கையின் பள்ளியில் இருந்து வீடு நோக்கிய முதல் ஓட்டத்தின்போது ஒலிக்கும் பின்னணி இசை நம்மையும் அந்தச் சிறுமியுடன் சேர்த்தே ஓட வைக்கிறது. அதேபோல் மாரத்தான் ஓட்டத்திலும் பாடலும், இசையும்தான் “எப்படியாவது இவன் ஜெயிக்கணுமே..?” என்ற நமது கோரிக்கையை வெளிப்படுத்துவதுபோல அமைந்திருக்கிறது.

ஒரிஜினல் ஈரான் படத்தில் இல்லாத  2 விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. ஒரிஜினலில் அண்ணன் பரிசாகக் கிடைத்த பணத்தில் தங்கைக்காக புதிய ஷூ வாங்குவதோடு முடியும். ஆனால் இதில் அண்ணன், தங்கை இருவரும் தற்போது ஷூ தயாரிக்கும் நிறுவனத்தையே நடத்தி வருவதாகவும், அதற்காக ஜனாதிபதியிடமிருந்து விருது பெறுவது போலவும் முடித்திருக்கிறார்கள். இதுவும் கொஞ்சம் பொறுத்தம்தான்..!

தனது முதல் நான்கு படங்களாலுமே ‘இயக்குநர் சாமி’ என்றாலே “அப்படித்தானோ” என்று நினைக்க வைத்தவர்.. அதற்கெல்லாம் பரிகாரம் செய்வதுபோல இந்த அழகான படத்தை தனது அழகான இயக்கத்தினால் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்து, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று..!

பார்த்து விடுங்கள் மக்களே..!!!

RATING : 4.5 / 5

- Advertisement -

Read more

Local News