Thursday, November 21, 2024

டிவீட்டரில் அஜீத்-விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இணையத்தில் மீண்டும் அஜீத்-விஜய் ரசிகர்களின் மோதல் துவங்கிவிட்டது.

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை கூட, கூட சினிமா நடிகர்களின் ரசிகப் பட்டாளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தங்களது அபிமான நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக பேசுவதும், குரல் கொடுப்பதம், எதிர்ப்பவர்களைத் திட்டுவதுமாக ரசிக குஞ்சுகளின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

சமீப ஆண்டுகளில் இந்த இணையச் சண்டையில் முனைப்பாக இருப்பது அஜீத்-விஜய்யின் ரசிகர்கள்தான். இரு தரப்பு ரசிகர்களுமே தங்களது அபிமான நடிகர்தான் தமிழகத்தில் நம்பர் ஒன் நடிகர் என்பதை நிறுவுவதற்காக ஒருவர் மேல் ஒருவர் சேற்றினை வீசி வருகிறார்கள்.

லேட்டஸ்ட்டாக அஜீத் ரசிகர்கள் செய்த ஒரு கலாட்டாவினால் விஜய் ரசிகர்களும் கோதாவில் குதிக்க. டிவீட்டர் தளம் திக்குமுக்காடிப் போயிருக்கிறது.

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் பத்திரிகை பேட்டியொன்றில், தன் மகன் தன்னைப் புறக்கணிப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இதைக் கண்ட அஜீத் ரசிகர்கள் உடனடியாக டிவீட்டரில் #பெத்தவர்கிட்டபேசுங்கவிஜய் என்ற ஹேஸ்டேக்கை துவக்கி இதில் விஜய்க்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அறிவுரைக்குள் நடு நடுவே விஜய்யை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்திருக்கிறார்கள்.

இந்த ஹேஸ்டேக் டிரெண்ட்டிங்கானதை அடுத்து விஜய் ரசிகர்களும் கோதாவில் இறங்கிவிட்டார்கள். #வாழவிடுங்கஅஜீத் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய விஜய் ரசிகர்கள் இதைப் பயன்படுத்தி அஜீத் தமிழகத்து தயாரிப்பாளர்களைப் புறக்கணிப்பதையும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலருக்கும் உதவி செய்ய மறுப்பதையும், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதையும் சொல்லிக் காட்டி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது இந்திய டிரெண்டிங்கில் இந்த இரண்டு ஹேஸ்டேக்குகள்தான் தெறிக்க விடுகின்றன. சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களுமே இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ரசிக மனப்பான்மையையும் தாண்டி அடுத்த நடிகரின் ரசிகனை பேசவே விடக் கூடாது என்னும் அகங்காரத்திற்கும், அதிகார மனோபாவத்திற்கும் இட்டுச் செல்கிறது.

ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன்பேயே சம்பந்தப்பட்ட நடிகர்கள் முழித்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

Read more

Local News