நடிகர் விஜய்க்கு இன்றைக்கு 47-வது பிறந்த தினம். அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அபிமான நடிகரான விஜய்யின் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
இந்த நேரத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிரெண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படங்களின் இயக்குநரான சித்திக் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவருடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் பாஸில் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ‘ஹரிகிருஷ்ணன்’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் குஷால்தாஸ் கார்டனில் நடந்து கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் அதே பில்டிங்கில் விஜய் நடித்த வேறொரு படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கேமிராமேன் அனந்தக்குட்டன் விஜய்யை எங்களிடத்தில் அழைத்து வந்து என்னிடம், லால் மற்றும் பாசில் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
சில ஆண்டுகள் கழித்து நான் ‘பிரெண்ட்ஸ்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தபோது விஜய்தான் முதலில் என் கவனத்திற்கு வந்தார். அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினோம். அவருக்குப் பிடித்திருந்தது. உடனேயே நடிக்க ஒத்துக் கொண்டார். அது எந்த அளவுக்கு ஹிட்டானது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் ‘காவலன்’ படத்தின் கதையையும் நான் முன்பேயே விஜய்யிடம் கூறியிருந்தேன். அவருக்கு ஓகேதான் என்றாலும் தயாரிப்பாளருக்கு திருப்தியில்லை. அடிதடி, ஆக்சன் படமாக அதை விரும்பினார் தயாரிப்பாளர். ஆனால் மலையாளத்தில் அந்தப் படம் ஹிட்டானவுடன் விஜய் அதே பாணியில் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
விஜய் ஒரு முறை கதையையும், கதாபாத்திரத்தையும் கேட்டு திருப்திபட்டுவிட்டால் அதன் பின்பு யார் இடையில் புகுந்து என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். “எதுவாக இருந்தாலும் இயக்குநரிடம் கேளுங்கள்” என்பார்.
அதே நேரம் விஜய் போன்று நேரத்தைப் பின்பற்றும் நடிகரை நான் பார்த்ததில்லை. காலையில் 8.50 மணிக்கு மேக்கப்போடு செட்டுக்கு வந்துவிடுவார். அதற்குப் பிறகு 9 மணி நேரமானாலும் களைப்பில்லாமல் நடித்துக் கொடுப்பார்.
“ஷாட் ரெடி” என்ற தகவல் சொன்னவுடன் கேரவனில் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு கீழே இறங்கி வந்துவிடுவார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்குப் பிறகு விஜய் மட்டுமே மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கக் கூடியவர்..” என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார் இயக்குநர் சித்திக்.