Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

ஆபாசப் படங்களைத் தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் திடீர் கைது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வெளியிட்ட குற்றத்திற்காக நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார். மும்பையில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார.

இந்த நிலையில் நேற்று இரவில் அவர் அதிரடியாக மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மும்பை நகர காவல்துறை ஆணையரான ஹேமந்த் நகார்லே வெளியிட்ட அறிக்கையில், “மும்பை குற்றப் பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி சிலர் வெளியிடுகிறார்கள் என்று புகார் வந்தது.

இது பற்றி நாங்கள் தீவிரமாக விசாரித்தபோது இந்த ஆபாசப் பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதற்கும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. இது குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் திரட்டிவிட்டோம். இதன் பின்புதான் அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்..” என்று கூறியுள்ளார்.

ராஜ் குந்த்ரா மீது ஏமாற்றுதல், மோசமாக நடந்து கொள்வது, ஆபாச வீடியோக்களைத் தயாரித்தல், அதனை பொது இடங்களில் வெளியிட்டது.. ஆபாச புகைப்படங்களை வெளியிட்டது.. புத்தகங்களில் புதுப்பித்தது என்று பல்வேறு பிரிவுகளில் ஐ.டி. சட்டப் பிரிவின் கீழ் மும்பை காவல் துறை வழக்கினை பதிவு செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா உடனடியாக மும்பையின் குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

காவல்துறையில் இருந்து கிடைத்தத் தகவலின்படி, மும்பையின் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த வாரம் தங்களிடம் வந்த புகாரையடுத்து 2 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் தங்களை வலுக்கட்டாயமாக நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வைத்தார்கள் என்று 9 பேர் புகார் அளித்திருக்கிறார்கள். படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள் அனைத்தும் மொபைல் போனில் பணம் கட்டிப் பார்க்கக் கூடிய அப்ளிகேஷன்களில் மட்டுமே தெரியக் கூடியவையாம்.

இதில் கூடுதலாக சர்ச்சையான நடிகையான பூனம் பாண்டேயும் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது உதவியாளர் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடர்ந்துள்ளார். பூனம் பாண்டேவின் வீடியோக்களை அவரது அனுமதியில்லாமல் ராஜ் குந்த்ரா தனது மொபைல் அப்ளிகேஷனில் பயன்படுத்தியிருக்கிறார். இதற்குத் தகுந்த நஷ்டஈட்டினை தனக்குத் தர வேண்டும் என்று கேட்டுள்ளாராம் பூனம் பாண்டே.

ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா தம்பதிகள் 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு வையான் ராஜ் என்ற மகனும், ஷமிஷா என்ற மகளும் உள்ளனர்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு பாலிவுட்டே இந்த நள்ளிரவிலும் முழித்துக் கொண்டிருக்கிறதாம்..!

- Advertisement -

Read more

Local News