‘கணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
நடிகர் நாசர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “4 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் இந்த டைம் மெஷின் தரை இறங்கியுள்ளது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து “இயக்குநரிடம் கதை கேளுங்கள்…” என்று சொல்லக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எஸ்.ஆர்.பிரபு அவருடைய நிறுவனத்தில் ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீகார்த்திக்கைக் கண்டுபிடித்தது ஆச்சரியமாக உள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயம். இந்தியாவில் இது போன்று படங்கள் அதிகம் வருவதில்லை. ஸ்ரீகார்த்திக் என்னிடம் கதையைச் சொல்லும்போது நானே குழந்தை மாதிரி மாறிட்டேன். கதை பற்றி நிறைய பேசினோம். “இந்த விஷயங்கள் புரியாது. அந்த விஷயங்கள் புரியாது…” என்று பல மணி நேரம் சண்டைகூட போட்டிருக்கிறேன். “இந்தக் கதையை ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாக கூறினால்தான் ரசிகர்களுக்குப் புரியும்” என்றேன்.
உண்மையாகவே ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டம்தான் இந்தப் படம். இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நிறைய விஷயங்களை பேசினோம். இந்த குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்தது போல உணர்ந்தேன்.
நான் கார்த்திக்கிடம், “வயதானவன் மாதிரி மேக்கப் போடுவதற்கு பதிலாக, வயதானதுபோல் நடித்து விடுகிறேன்…” என்றேன். ஆனால் அவரோ, “இல்லை சார்.. வயதானவர் போல் நடிக்க வேண்டாம்.. தோற்றமளித்தாலே போதும்” என்றார். இதற்காக கார்த்திக்குடன் பெரிய வாக்குவாதமே நடந்தது.
இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு மேக்கப் போடுவதற்கு 2 மணி நேரம் ஆகும். மேக்கப் போடுவதற்காக பெங்களூருவில் இருந்து சிறப்பு நிபுணரை வரவழைத்தார் தயாரிப்பாளர் பிரபு. பிரபு எனக்கும் கார்த்திக்கும் மட்டுமல்ல, இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதை எல்லாவற்றையும் வழங்கினார்.
ஷர்வானந்துடன் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறேன். விடாமுயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், அது ஷர்வானந்துக்கும் பொருந்தும். நானும், அவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதில் அவருக்கு எது மேலே பட்டாலும் துடைத்துக் கொண்டே இருக்கும்படியான கதாப்பாத்திரம். அதை மிக அழகாக செய்திருந்தார். இந்தப் படத்தைப் போலவே, இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.
ரீத்து சிறு வயது முதலே என்னுடன் நடித்துக் கொண்டு இருக்கிறார். நாங்கள் இருவரும் ‘தீனி’ என்ற படத்தில் நடித்தோம். ஒரு சிறிய தீவு, அதிலிருந்து வெளியே போகவே முடியாது. ஒரு நாளில் 2 மணி நேரம்தான் கடல் உள்வாங்கும், அந்த சமயத்தில்தான் சென்று வர முடியும். அந்தப் படத்தில் ரீத்து சிறப்பாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்ட நடிக்கக் கூடியவர். இப்படத்திற்கும் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
அமலா அழகான, அற்புதமான மனுஷி. அவரின் அறிமுக காலக்கட்டத்தில் இருந்தே எனக்கு அவருடன் நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் மீண்டும் நடிக்க வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் டிராவல் தேவையே இல்லை. அந்தக் காலம் உறைந்து, அப்போது இருந்தது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அவரை பார்ப்பதைவிட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால்தான் நான் தள்ளி நின்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.
அமலா கதாபாத்திரம், என்னுடைய கதாபாத்திரம், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் தேடித் தேடி கண்டு பிடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக்.
இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த தருணம் மறுபடியும் கிடைத்தால் “நாம் தவறு செய்தபோது அதை செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா.?” என்று நினைக்கத் தோன்றும். வரும் காலங்களில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்தப் படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படம் பொழுதுபோக்கான படம் என்பதைவிட ஈடுபாட்டுடன் பார்க்கக் கூடிய படம் என்று சொல்வதே சரியாக இருக்கும். 2-1/2 மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியாது. ஆனால், நம் மனதினுடைய மெல்லிய உணர்வுகளைத் தூண்டி விடும் படம். இந்தப் படம் எல்லாம் மனங்களையும் போய் சேரும் என்று நம்புகிறேன்…” என்றார்.