விஷால் நடிப்பில் உருவாகியுள்ள் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘லத்தி’ படத்தின் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டான இன்று விஷால் தனது அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டார். ‘AAA’ படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். இது விஷாலின் 33-வது படமாகும்.
‘எனிமி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ரஜினி நடித்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற ‘பாட்ஷா’ படத்தில் வில்லனாக நடித்திருந்த ரகுவரனின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மார்க் ஆண்டனி’தான். இந்தக் கதாபாத்திரம் இன்றளவும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
ரகுவரன் சூட்டியிருந்த இந்தப் பெயரைத்தான், தற்போது விஷால் தனது படத்திற்குத் தலைப்பாக வைத்திருக்கிறார்.
இப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமான செலவில் தயாராக இருக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் பட வேலைகள் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் கையில் துப்பாக்கியோடு தோன்றுவதால் இதுவும் ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என்றே தெரிகிறது.
டைட்டில் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிற துவங்கியுள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது.