தமிழ்த் திரையுலகத்தின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.பி. பிலிம்ஸ் கே.பாலுவிற்காக தான் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து அளிக்கப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
கே.பி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.பாலு தமிழில் 1990-களில் முதன்மையான தயாரிப்பாளராக வலம் வந்தவர்.
‘சின்னத்தம்பி’, ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘உத்தமராசா’, ‘கல்யாண கலாட்டா’, ‘ஜல்லிக்கட்டுக் காளை’, ‘பாண்டித்துரை’, ‘பிக்பாக்கெட்’, ‘மதுரை வீரன் எங்க சாமி’ உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிரபலமான திரைப்படங்களைத் தயாரித்தவர்.
சமீப ஆண்டுகளாக திரைப்படங்களைத் தயாரிக்கவில்லையென்றாலும் பல திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தார். நடிகர் விஷாலின் சமீபத்திய பல திரைப்படங்களுக்கும் நிதியுதவி செய்து விஷாலுக்கு பெரும் உதவிகளைச் செய்து வந்தவர் இவர்தான்.
கடந்த மாத இறுதியில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட சென்னையில் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 2-ம் தேதியன்று காலமானார்.

இவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நடிகர் விஷால் முன் வந்துள்ளார். ஏற்கெனவே விஷால் கே.பாலுவின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்கான பூஜையும் நடந்துவிட்டது. அறிமுக இயக்குநரான சரவணன் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படம் வரும் மார்ச் மாதம் துவங்குவதாக இருந்தது. அதற்குள்ளாக தயாரிப்பாளர் கே.பாலு காலமாகிவிட்டார். இருந்தாலும் இந்தப் படத்தைத் திட்டமிட்டபடி தயாரித்து முடித்து, படத்தின் லாபத்தை அப்படியே தயாரிப்பாளர் கே.பாலுவின் குடும்பத்திற்கு வழங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்..!