நடிகர் விஜய் தனது அம்மாவான ஷோபா சந்திரசேகர் மற்றும், அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஆண்டு திடீரென்று விஜய்யின் பெயரில் ஒரு கட்சியைத் துவக்கினார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போதே தனது பெயரை எந்தக் காலத்திலும் புதிதாகத் தொடங்கியிருக்கும் கட்சி மற்றும் அரசியலில் பயன்படுத்தக் கூடாது என தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தன்னுடைய ஒப்புதலின்றி, ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியும், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கு தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, அந்தக் கட்சியில் பணியாற்றவோ வேண்டாம் என்று தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்தக் கட்சியை வாபஸ் பெறும் முயற்சியில் எஸ்.ஏ.சி. இறங்கவில்லை. மாறாக புதிதாக உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் ரகசியமாக நியமித்து வந்து கொண்டிருந்தார். இதையறிந்த நடிகர் விஜய் தனது தந்தை மீதும், அந்தக் கட்சியில் செயலாளர் என்று தேர்தல் கமிஷனில் கொடுத்த விண்ணப்பத்தில் சொல்லப்பட்டிருந்த தனது தாயார் ஷோபா மீதும் 15-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவில் தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
அந்த வழக்கில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அவரது கட்சியிலும், அமைப்பிலும் தன் பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சிவில் வழக்கில் தனது தந்தை, தாயார் மற்றும்அவரது அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 11 பேரை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்.
இந்த மனு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.