Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-6 சுருளிராஜனால் மறக்க முடியாத நூறு ரூபாய் நோட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல மிகவும் வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் நகைச்சுவை நடிகரான சுருளிராஜன். எந்த சினிமா பின்னணியும் இன்றி சினிமா உலகிற்குள் நுழைந்த சுருளிராஜன் 1980-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். இந்தச் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத ஒன்று. 

மதுரையில் நடைபெற்ற அமெச்சூர்  நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய  சுருளிராஜனின் வசனம் பேசுகின்ற பாணியும், அவரது கீச்சுக் குரலும் ரசிகர்களிடையே மிகுந்த  வரவேற்பைப் பெற்றதைக் கண்ட அவரது  நண்பர்கள் அனைவரும் “முயற்சி செய்தால் நீ நிச்சயம் சினிமாவில் பெரிய ஆளாக வரலாம்” என்று அவரிடம் கூறினார்கள்..

அதுக்கு பிறகும்  மதுரையில்  இருக்க சுருளிராஜனின் மனம் ஒப்புக் கொள்ளுமா..?

சினிமா வாய்ப்பு தேடி 1959-ம் ஆண்டு சென்னைக்கு வந்த சுருளிராஜன்  ‘அய்யா தெரியாதய்யா’ ராமராவின் நாடகக் குழுவில் இணைந்தார் . “நான் ஒரு நகைச்சுவை நடிகனாக வெளியே தெரிந்ததற்கு முக்கிய காரணம் ராமாராவ் அவர்கள்தான். அவருடைய நாடகத்தில் நல்ல வாய்ப்பை வழங்கி எனது முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் அவர்தான் ” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் மனம் திறந்து ராமாராவ் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் சுருளிராஜன்.

சுருளிராஜனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக இருந்த இன்னொருவர் கதாசிரியரும் இயக்குநருமான டி.என்.பாலு.

சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோரது படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்குகின்ற வாய்ப்பை 1970-80-களில் பெற்ற டி.என்.பாலுதான்  ஜெய்சங்கர் அறிமுகமான  ஜோசப் தளியத்தின்  ‘இரவும் பகலும்’  படத்தின் கதாசிரியர்.

தான் எழுதி இயக்கி, நடித்த ‘நினைக்கவே இல்லை’ எனற நாடகத்திற்கு இயக்குநர் ஜோசப் தளியத்தை அழைத்திருந்தார் டி.என்.பாலு. அந்த நாடகத்தில்   முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சுருளிராஜனின் நடிப்பும், அவர் வசனங்களைப் பேசியவிதமும்… ஜோசப் தளியத்துக்கு மிகவும் பிடித்து போனது.

சுருளிராஜனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளைத் தரவேண்டும் என்று அன்றே முடிவு செய்து விட்டார் அவர். ஆனால்  அவர் அப்போது இயக்கி கொண்டிருந்த ‘இரவும் பகலும்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் நட்சத்திரத் தேர்வு முடிந்துவிட்டு இருந்ததால் அந்த படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்தான் சுருளிராஜனை அவரால் பயன்படுத்த முடிந்தது.

1965-ம் ஆண்டு பொங்கலன்று வெளியான  ‘இரவும் பகலும்’ படத்தில் மட்டுமின்றி, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்திலும்   ஒரு சிறு கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருந்தார் சுருளிராஜன்

‘எங்க  வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் துணை நடிகர்கள் பட்டியலில் ‘சுருளி’ என்று அவர்  பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், ‘இரவும் பகலும்’ பட டைட்டிலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

‘இரவும் பகலும்’  படத்தில் சரியான முறையில் சுருளிராஜனை பயன் படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் ஜோசப் தளியத்திற்கு இருந்ததால் தனது அடுத்த படமான ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சுருளிராஜனை நடிக்க வைத்தார். 

அந்தப் படத்தில் நடிக்க முன் பணமாக நூறு ரூபாய் நோட்டு ஒன்றை சுருளிராஜனிடம் கொடுத்தார் ஜோசப் தளியத். ஒரு நகைச்சுவை நடிகருக்கு முன் பணம் நூறு ரூபாய்தானா என்று நீங்கள் ஆச்சர்யப்பட ஆரம்பிப்பதற்கு முன்னால், சுருளிராஜனை அந்த நோட்டு படுத்திய பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அந்த நோட்டை கையில் வாங்கியவுடன் சுருளிராஜனுக்கு  ஏற்பட்ட பிரமிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆனது. ஏனென்றால்  நூறு ரூபாய் நோட்டு என்று  ஒன்று   இருக்கிறது என்று  அவருக்குத்  தெரியுமே… தவிர, நூறு ரூபாய் நோட்டை அதுவரை அவர் கண்ணால்  பார்த்ததேயில்லை.

அதிசயமாக அந்த நோட்டையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் பய பக்தியோடு  அந்த நோட்டை மடித்து தன பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். பின்னர் ஜோசப் தளியத்திற்கு மனதார நன்றி கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அந்த அலுவலகத்திலிருந்து அவரது  வீட்டுக்கு செல்வதற்கு பஸ் டிக்கெட் எடுக்க அவரது கையில் சில்லறைக் காசு எதுவும் இல்லை. அந்த அலுவலகத்திற்கும் சுருளிராஜன் வீட்டுக்கும் இருந்த இடையில இருந்த தூரமோ பல மைல்கள்.

பையில் இருக்கிற நூறு ரூபாயை மாற்றினால் பஸ்ஸிலும் போகலாம், ஆட்டோவிலும் போகலாம். டாக்சியிலும் போகலாம். ஆனால், அதுக்கு நூறு ரூபாய் நோட்டை மாற்ற வேண்டும். அப்படி மாற்றிவிட்டால்   யாரிடமும்  அந்த நோட்டைக் காட்ட முடியாது என்பதால் அந்த நூறு ரூபாய் நோட்டை பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொட்டுப் பார்த்தபடியே  பல மைல் நடந்து வீடு போய்  சேர்ந்தாராம் அவர்.

அதற்குப் பிறகு லட்சக்கணக்கில் சுருளிராஜன் சம்பாதித்தார் என்றாலும் அந்த முதல்  நூறு ரூபாய் நோட்டு அவரைப்  பொறுத்தவரை மறக்க முடியாததாகிவிட்டது.

‘காதல் படுத்தும் பாடு’ படத்தைப் பொறுத்தவரையில் அது சுருளிராஜனுக்கு மட்டுமல்ல… பல பேருக்கு திரையுலகின் வாசல்களைத் திறந்து வைத்த படம்.

அந்தப் படத்தில்தான் கதாசிரியர் கலைஞானம் கதாசிரியராக அறிமுகமானார். வாணிஸ்ரீ தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். எஸ்.எஸ்.சந்திரன் நடிகராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய  வெள்ளைச்சாமி படத் தொகுப்பாளராக அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான் .

‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் படத்தில் நடிப்பதற்கான அவரது ஊதியம் மொத்தத்தையும் வாங்கி செலவழித்துவிட்டார் சுருளிராஜன்.

கையில் சல்லிக்காசு இல்லாத  நிலையில் நாடகம் நடத்தலாம் என்று அவர் வெளியூர் சென்றபோது, அங்கே ஒரு  வாரம் கடுமையாக மழை பெய்தது. அதனால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நாடகம் நடத்தப் போன அவரது எண்ணம் ஈடேறாதது மட்டுமல்ல…  பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய சூழலும் அவருக்கு ஏற்பட்டது.

சென்னைக்கு திரும்பவே பெரிதும் சிரமப்பட்டு ஒரு வழியாக சென்னை திரும்பிய  சுருளிராஜனை அவர் குடியிருந்த வீட்டின்  சொந்தக்காரர் வாடகை பணத்தைக் கேட்டு விரட்டு விரட்டு என்று விரட்டினார். மதியம் சாப்பிடவே கையில் காசு  இல்லை.. இந்த நிலையில் வாடகையை எங்கே கொடுப்பது..?

இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் பிரச்னைகள் சூழ்ந்ததால் விரக்தியின் எல்லைக்கே சென்றார் சுருளிராஜன். இனியும் சினிமா வாழ்க்கையை நினைத்துக் கொண்டு இங்கே இருக்க வேண்டுமா என்றெல்லாம் நினைக்க தொடங்கியது அவர் மனது. 

அந்த நேரம் பார்த்து அவரது நண்பர் சிவராஜ்  அவரைப் பார்க்க வர சோகத்தின் உச்சியில் இருந்த சுருளிராஜன் “இந்த வாழ்க்கை எனக்கு தேவைதானா?” என்று சலிப்போடு  அவரிடம்  கேட்டார். அவர் இப்படி கேட்டபோது அந்த சோகம் அந்த நண்பரை தொற்றிக் கொள்ளவில்லை. மாறாக அவரது முகத்தில் புன்னகை தோன்றியது 

“நேராக ஜெமினி கார்னருக்கு ஒரு முறை போய் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை உனக்குத் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்” என்றார் நண்பர் சிவராஜ்.  

“ஏன் அங்கே யாராவது ஜோசியம் சொல்றவங்க இருக்காங்களா?”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு? முதல்ல போய் பார்த்துட்டு வா.. அப்புறம் பேசு” என்றார் எந்த நண்பர்.

ஜெமினி கார்னருக்கும், தனது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாவிட்டாலும் நண்பர் சொல்கிறாரே என்பதற்காக ஜெமினி பகுதிக்கு நடந்தே சென்றார் சுருளிராஜன்.

அங்கு போய் பார்த்தவுடன் அவரால்  தனது கண்களையே நம்ப முடியவில்லை. தான் காண்கின்ற காட்சி நிஜம்தானா என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தார். அது  போதாதென்று  தன்  கையையும்  ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.  சுருளிராஜனை  அப்படி ஒரு நிலைமைக்குத்  தள்ளியது  எது தெரியுமா..?

ஜெமினி கார்னரில் வைக்கப்பட்டிருந்த அவரது  மிகப் பெரிய கட் அவுட்..

‘காதல் படுத்தும் பாடு’ படத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் அப்படி ஒரு முக்கியத்துவத்தை  சுருளிராஜனுக்குத் தந்திருந்தார் ஜோசப் தளியத்.

அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன்  சுருளிராஜனின்  கண்களில் இருந்து அவரையுமறியாமல் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அவரது பசி பறந்து போனது. அதுவரை அவர் மனதில் இருந்த வேதனை எங்கே போனது என்று தெரியவில்லை.

சினிமாவில் இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்று அவநம்பிக்கையோடு இருந்த சுருளிராஜன், இனி சினிமாதான் தனது வாழ்க்கை என்று  முடிவெடுத்ததிலே  அந்த கட் அவுட்டுக்கு முக்கிய இடம் உண்டு. அதற்குப் பிறகு சுருளிராஜனின் வாழ்க்கையில் இறங்கு முகமே இல்லை.

- Advertisement -

Read more

Local News